விளக்கம் : இது நம்பியகப்பொருள் 132 முதல் 135 ஆகிய சூத்திரங்களை ஒட்டியது. 90. | சார்தல்வினா விடைமறைநேர் கூடல்கூட் டுஏழாய்த் தலைவன்பாங் கனைச்சார்தல் உற்றதுவி னாதல் கூறும்உற்ற துரைத்தல்பாங் கன்கழறல் மறுத்தல் குரிசிலைப்பாங் கன்பழித்தல் வேட்கைதாங் கரிதாம் ஏர்புரைத்தல் பாங்கன்மனத் தழுங்கல்மன் னொடுஅழுங்கல் எவ்விடத்துஎவ் வியற்று எனல்இவ் விடத்துஇயல்இ தென்றல் ஆரும்இறை வனைத்தேற்றல் குறிவழியே சேறல் அவட்காண்டல் இகழ்ந்ததனுக்கு அன்பன்இரங் குதலே. [6] | இது பாங்கற் கூட்டத்தை விளக்குகிறது. உரை : 1. பாங்கனைச்சார்தல், 2. பாங்கன் தலைவனை வினாவுதல், 3. பாங்கன் பதில் கூறுதல், 4. தலைவன் எதிர்மறுத்தல், 5. ஒத்துக்கொள்ளல், 6. கூடுதல், 7. பாங்கியோடு சேர்த்தல் என்று ஏழுவகைப் பெரும் பிரிவும் 1. தலைவன் பாங்கனை அணுகுதல், 2. நடந்தது என்னவென்று (பாங்கன் தலைவனைக்) கேட்டல், 3. தலைவன் நடந்தது என்னவென்று கூறுதல், 4. பாங்கன் சொல்லுதல், 5. தலைவன் மறுத்தல், 6. தலைவனைப் பாங்கன் பழித்தல், 7. தலைவன் வேட்கை தாங்குவதற்கு அரிது என்று கூறல், 8. பாங்கன் தன்மனத்து அழுங்குதல், 9. பாங்கன் தலைவனுடன் சேர்ந்து வருந்துதல், 10. பாங்கன் எந்த இடத்தில் எவ்வாறு உள்ளது என்று கேட்டல், 11. தலைவனும் இந்த இடத்தில் இவ்வாறு என்று கூறல், 12. பாங்கன் தலைமகனைத் தேற்றுதல், 13. பாங்கன் (தலைவன்) குறிப்பிட்ட வழிச் செல்லுதல், 14. தலைவியைக் காண்டல், 15. தலைவியை இகழ்ந்து சொன்னதற்குப் பாங்கன் வருந்துதல். |