மரபு என்ற தலைப்பே கொடுக்கப்பட்டுள்ளது அங்கே பொருத்தமாக உள்ளது. எனவே ‘நூல்வழி’ என்று இறுதியில் காணப்படும் தலைப்பே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாயிரம் என்று மற்ற நூல்களில் காணப்படும் செய்திகளே இப்பகுதியில் பேசப்படுகின்றன. 2. | பூமிசைகீழ்க் கடல்குமரி குடகம்வேங் கடத்துட் புகுந்ததமி ழியல்ஐந்தும் அகவல்வி ருத்தமதால் ஆ(ம்)முன்னூல் வழியாய்மெய் யநித்தநூல்விரி வென்று அஞ்சும்அவர் உணர்ந்துபய நூலுணர்ஏ துவினான் ஏமமெனுஞ் சுவாமிநாதம் பகர்ந்தான்பொ திகைநிகண்டு உரைத்தோன்சிவ சுப்பிரமணி யன்எனும் என்னை மாமகன்என் றருளும்எந்தை நதிகுலன்கல் லிடையூர் வாழ்சுவாமி கவிராசன் எனுநூல்வல் லோனே (1) | சிறப்புப் பாயிரம் கூறுவது. உரை : கிழக்கே கடலும் (வங்காள விரிகுடா) தெற்கே குமரியும் (கன்னியா குமரியும்), மேற்கே குடகும், வடக்கே வேங்கடமும் எல்லையாக உடைய தமிழ்மொழியின் இயலான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்து வகையையும் ஆசிரிய விருத்தத்தால் முன்னோர் சொன்ன நூலைத் தழுவி யாக்கை நிலையாதது, நூல் விரிவானது என்று அஞ்சுபவர்கள் கற்றற்கு ஏதுவாகக் காப்பாகும் என்று கூறத்தக்க சுவாமிநாதம் என்றநூலைப் பகர்ந்தோன் பொதிகை நிகண்டு செய்தவனும் சிவசுப்பிரமணியன் என்னும் பெயரை உடைய மகனாம் என்னை ஈன்றவனும் கல்லிடையூரில் வாழ்ந்தவனுமாகிய சுவாமி கவிராயன் என்ற இலக்கணக் கல்வியில் வல்லோன். விளக்கம் : தன்மகனும் சிறப்புப்பாயிரம் கூறுவதற்கு உரியவன் ஆதலின் இது நூலாசிரியரின் மகன் பாடிய சிறப்புப்பாயிரம். இப்பாயிரம் தமிழின் எல்லையும் சுவாமிநாதத்தின் முதனூலும் யாப்பும் இயைபும் காரணமும் நூற்பெயரும் ஆக்கியோன் பெயரும் பயனும் கூறுகின்றது. |