(இ-ள்.) ஆவும் அகரக்கு இகரத்துக்கு ஐயும் ஒளவும் உகரக்கு ஏவும் இருவினுக்கு ஆரும் விருத்தி. - 1அகரத்திற்கு ஆகாரமும் இகரத்திற்கு ஐகாரமும் உகரத்திற்கு ஒளகாரமும் இருவென்பதற்கு ஆரென்பதும் ஆதேசமாய் வந்து விருத்தியெனப்படும்; எழில் உகரக்கு ஓவும் இகரத்திற்கு ஏயுங் குணம் என்று உரைப்ப-2 உகரத்திற்கு ஓகாரமும் இகரத்திற்கு ஏகாரமும் ஆதேசமாய் வந்து குணமெனப்படும் என்று சொல்லுவர் மேலாகிய புலவர்; வந்து தாவும் இவை தத்திதத்தினும் தாதுப் பெயரினுமே - இந்த விருத்தியுங் குணமுந் தத்திதப்பெயர் முடிக்கும் இடத்தும் தாதுப்பெயர் முடிக்கும் இடத்தும் வரப்பெறும் (எ - று.)
(12)
13. (தமிழ்ச் சந்தி) உயிர்முன் உயிர் வருதலும், சில நிலைமொழிகளின் ஈறழிதலும்
மூன்றொடு நான்கொன்ப தாமுயிர்ப் பின்னுயிர் முந்தினடு
ஆன்ற யகாரம்வந் தாகம மாகும்;அல் லாவுயிருக்
கேன்ற வகாரம்;எட் டேற்கும் இரண்டும்; இறுதிகெட்டுத்
தோன்று நிலையும் ஒரோவிடத் தாமென்பர் தூமொழியே !
1. விருத்தி சந்தி
(i) தத்திதம் :-
தசரதன் பிள்ளை = தாசரதி - அ, ஆவாயிற்று. விதர்ப்ப நாட்டரசன் = வைதர்ப்பன் - இ, ஐயாயிற்று. குசிகன் மரபிற் பிறந்தவன் = கௌசிகன் - உ, ஒளவாயிற்று. மிருகண்டுவின் பிள்ளை = மார்க்கண்டேயன் - இரு, ஆர் ஆயிற்று.
(ii) தாதுப் பெயர் :-
தாதுப் பெயர் - தொழிற்பெயர்
வஸ் = வாஸம் - அ, ஆவாயிற்று
இஷூ = ஐஷூ - இ, ஐயாயிற்று.
கிரு = காரியம் - இரு, ஆர் ஆயிற்று
வாசம் - வசித்தல்; ஐஷூ - விருப்பம்; காரியம் - செயல்
2. குண சந்தி
தாதுப் பெயர்:-
புத் = போதம் - உ, ஓவாயிற்று. போதம் - அறிவு
பிரவிஸ் = பிரவேசம் - இ, ஏயாயிற்று.