110

கொற்றப் பொற்றார் சூடாப் பொலிகுதல், பனையும், வேம்பும், ஆத்தியுமென்று முக்கோக்களுக்குஞ் சொல்லப்பட்ட மூன்று தாருஞ் சூடிப் போர்ப் புக்கார்க்குப் பாடுதல்.

ஆரமரோட்டலாவது, பூசலிட்டு ஓட்டுவது.

துகளறு கல்தேடாப் பொறித்தலாவது, போருள் மடிந்தார் பெயர் பொறிக்கக் கல் தேடுதலும், பொறித்த கல்லு நீருட் குளிப்பித்தலும், கல் நடுதலுமாம்.

பெரும்படை என்பது, ஒரு தனியாள் வாள்வினை செய்து பட்டார்க்கு வினை முற்றுவித்து அவ்வினை வேறுபடுத்தல்.

வாழ்த்தல் என்பது, பல வாள்வினை செய்து பட்டார் கற்களைப் பார்த்துப் புகழ்ச்சி.

(15)

101. வஞ்சியின் வகை

அரவ மெடுத்தல் வயங்கிய லீகை விலக்கருமை
விரவு தனிச்சே வகம்வென்றி கூறல்வென் றார்விளக்கம்
நிரவும் வழிவொடு சோற்று நிலைகொற் றவர்மெலிவும்
பரவு தழிஞ்சியென் றின்னவை வஞ்சியின் பாற்படுமே.

(இ-ள்.) இவை வஞ்சி விகற்பமாம் (எ-று.)

அரவமாவது, படையெழுச்சி.

எடுத்தலாவது, படையெடுத்தல்.

வயங்கியலாவது, மேற்செல்வான் துணையரசரால் விளக்கமுற்ற பெருமை.

ஈகையாவது, மேற்செல்லப்படுவதான தன் சேனைத் தலைவற்குப் பெருங்கொடைத் தண்ணளி நல்குதல்.

விலக்கருமையாவது, மேற்செல்லப்படுவான் தனது விலக்குதற்கரிய வென்றி மிகு செலவு.

தனிச்சேவகமாவது, வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை.

வென்றி கூறலாவது, 'பத்துத் தலையோனைக் கட்டி உன்பாதத்து மடமொழியை மீளேனல்லேன்' என வருவது.