வேந்தன் சிறப்பு:-
"மற்றிவனை மாலென் றறிந்தாலவ் வாளரக்கன்
பெற்றி கருதுவதென் பேதையர்காள்--மற்றிவன்றன்
கண்டான் கடைசிவத்தற் குண்டோ கடலிலங்கை
வண்டா ரரக்கன் வலி."
மதிலேறுதலாவது, பகைவர் மதிலை மேற்சென்றோன் சேனை ஏறுதல்.
வெற்றி வாட்சிறப்பாவது, பொருத வேந்தனது வாட்சிறப்புச் சொல்வது.
படைமிகையாவது:-
"ஐயிருப தோசனையு மாங்கோ ரிடமின்றிக்
கைபரந்த சேனைக் கடலொலிப்பத்--தையல்
வழிவந் திராமன் வடகரையா னென்றான்
விழிவந்து வேறாக மீட்டு."
நாட்கோளாவது, கொற்றக் குடையைத்தான் கொற்ற வாளைத்தான் குறித்து நாட்கொள்வது.
காவலாவது, அகத்தோனால் அமைக்கப்பட்ட அரண் காவல்.
முடிகோளாவது, தொக்கிலாரை முடி கொண்ட சிறப்பு.
தொகை நிலையாவது, இருவர் சேனையுந் தொக்க நிலை.
கொற்றமாவது, அரண் சூழ்ந்த வேந்தன் கொற்றச் சிறப்பு உணர்த்தல்.
நீர்ப்போராவது, வலியாரைப் பெரியோரைத் துணையின்றியே சென்று பொருதல்; பிறவுமன்ன.
உழிஞையெல்லாம் அரண் பற்றியே வரும்.
(18)
104. வாகையின் வகை
நாற்குலப் பக்கமுக் காலங் களவழி நற்குரவை
ஆற்றல்வல் லாண்வேட்கை யார்பக்க மேன்மை யரும்பொருளே
தோற்றிய காவல் துறவு கொடைபடை யாளர்பக்கம்
மாற்றிய வொற்றுமை யோடுமற் றும்மிவை வாகையிலே.
(இ-ள்.) இவை வாகை விகற்பமாம் (எ-று.)
நாற்குலப் பக்கமாவது, ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், கோடல், கொடுத்தல் என்னும் அந்தணர் அறுதொழிலும்;