நான்காவது
யாப்பதிகாரம்1
யாப்புப்படலம்2
107. அசை இரண்டும் ஈரசை மூவசைச் சீர்களும்
குறிலு நெடிலு மெனுமிவை நேரசை; குற்றெழுத்துப்
பெறின்முன் இவையே நிரையசை யாம்;பிழைப் பில்லைபின்பொற்
றிறினும்; அசையிரண் டொன்றின்முற் சீர்மூ வசையொன்றிநேர்
இறுவ திடைச்சீர்; நிரையிறிற் பிற்சீர் எனவியம்பே.
(இ-ள்.) குற்றெழுத்துத்தான் நெட்டெழுத்துத்தான் தனியே வரின் நேரசையாம்; இவையிற்றின் முன்பு ஒரு குற்றெழுத்துப் பெற்றுக் குறிலிணையாயும் குறில் நெடிலாயும் வரின் நிரையசையாம்; நேரசையின் பின்பும் நிரையசையின் பின்பும் ஒற்றெழுத்து வரவும் பெறும், வாராதொழியவும் பெறும்; நேரசை நிரையசையாயுள்ளன இரண்டாய் ஒன்றின பொழுது முதற்சீரெனப்படும்; மூன்றசை ஒன்றி அவற்றின் ஈற்றசை நேரசையாய் வரின், அவை இடைச்சீர் என்பனவாம்; மூன்றசை ஒன்றி அவற்றின் ஈற்றசை நிரையசையாய் வரின், கடைச்சீர் எனக் கொள்க (எ - று.)
'போதிவேந்தன், சரணலாலரண் புகேம்.'
என்றது நேரசை நான்கிற்கும், நிரையசை நான்கிற்கும் உதாரணமாம். போ என்னுந் தனிநெடிலும், தி என்னுந் தனிக்குறிலும், வேந் என்னும் நெடிலொற்றும், தன் என்னுங் குறிலொற்றும், நேரசை நான்கிற்கும் உதாரணம். சர என்னுங் குறிலிணையும், ணலா என்னுங் குறினெடிலும், லரண் என்னுங் குறிலிணை ஒற்றும், புகேம் என்னுங் குறில் நெடிலொற்றும் நிரையசை நான்கிற்கும் உதாரணம். முதற்சீரை ஆசிரியச் சீரென்றும், இடைச்சீரை வெண்சீர் என்றும், கடைச்சீரை வஞ்சிச்சீர் என்றும் வழங்குவாரும் உளரெனக் கொள்க. வருஞ் செய்யுளில் அவற்றிற்கு உதாரணஞ் சொல்லுகின்றான்.
(1)
1. இது யாப்பிலக்கணத்தைக் கூறும் அதிகாரம் என்றாம்.
2. இது யாப்பைக் கூறும் படலம் என்றாம்.