129

111. எதுகையும் எதுகையின் வேறுபாடுகளும்


ஏன்றா முதலள வொத்திரண் டாமெழுத் தொன்றிவரிற்
சான்றா ரதனை யெதுகையென் றோதுவர்; தன்மைகுன்றா
மூன்றாவ தொன்ற லிரண்டடி யொன்றன் முழுதுமொன்றல்
ஆன்றா வினமுயி ராசிடை யாய்வரும் ஆங்கதுவே.

(இ - ள்.) அடிதோறும் முதலெழுத்தெல்லாந் தம்முள் ஒத்த அளவினவாய் இரண்டாம் எழுத்தொன்றி வரின், அஃது எதுகை என்று சொல்லப்படும்; எதுகை எனினும் தொடையெனினும் ஒக்கும்; அது மூன்றாம் எழுத்து ஒன்றி வந்த எதுகையும், இரண்டடி எதுகையும், சீர் முழுதும் ஒன்றி வந்த எதுகையும், வல்லின எதுகையும், மெல்லின எதுகையும், இடையின எதுகையும், இரண்டாம் எழுத்தின் ஏறின உயிரெழுத்து ஒத்தும் ஒற்று ஒவ்வாதும் வந்த உயிரெதுகையும், ஆசிடையிட்ட எதுகையும் என்று விகற்பிக்கப்படும் (எ-று.)

1'அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.'

இது முதலெழுத்துக் குறிலாய் இரண்டாம் எழுத்தொன்றி வந்த எதுகை.

2'பவழமும் பொன்னுங் குவைஇய முத்தின்
திகழரும் பீன்றது புன்னை.'

இது மூன்றாம் எழுத்து ஒன்றின எதுகை.

'நிறையோத நீர்நின்று நீதவமே செய்யினும் வாழி நீலம்
மறைவரியோ வரிவையரி னெடுங்கணே ரொவ்வாய் வாழி நீலம்
கண்ணொவ்வா யெனினுங் களித்து நகுதிநீ வாழி நீலம்
வண்ணமிது போமது வுண்டார்சே ரியையோ வாழி நீலம்.'

இஃது இரண்டடி எதுகை.

'வல்லளே போக மலர்மேலு மாட்டாதாள்
அல்லளே சொல்லீ ரயலீர்காண்--மெல்லலவன்
தோட்டுவரம் பூடாடுஞ் சோணாடு கைவிட்டு
வேட்டுவரம் பூடாடும் வெற்பு.'

இஃது இருசீர் முழுதும் ஒன்றி வந்த எதுகை.


1. திருக்குறள், 1.

2. யாப்ப - வி. 36-ஆம் சூ. மேற்கோள்.