நீடுசீர் மூவைந்தா நேரிசைவெண் பாவென்பர்
நாடுசீர் நாப்புலவர் நன்கு.'
இது நேரிசை வெண்பாவினுக்கு இலக்கணமும் இலக்கியமுமாகக் கண்டு கொள்க.
1'வஞ்சியே னென்றவன்ற னூருரைத்தான் யானுமவன்
வஞ்சியா னென்பதனால் வாய்நேர்ந்தேன்-வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியே னென்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ.'
இஃது ஒரு விகற்ப நேரிசை வெண்பா.
2'ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்ப்
போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்ருருதி
கார்ப்பெயல் மொய்ம்பினிற் செங்குளக் கோட்டின்கீழ்
நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனல்நாடன்
ஆர்த்தம ரட்ட களத்து.'
இது நான்கடியின் மிக்கு வந்தமையாற் பஃறொடை வெண்பாவாம் எனக் கொள்க.
3'சுடர்த்தொடீ கேளாய் தெருவினா மாடு
மணற்சிற்றில் காலிற் சிதையா வடர்ச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்நாள்
அன்னையும் யானு மிருந்தேமா வில்லிரே
உண்ணுநீர் வேட்டே னெனவந்தாற் கன்னை
அடற்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்
உண்ணுநீ ரூட்டிவா வென்றா ளெனயானுந்
தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்
டன்னா யிவனொருவன் செய்ததுகா ணென்றேனா
வன்னை யலறிப் படர்தரத் தன்னையான்
உண்ணுநீர் விக்கினா னென்றேனா லன்னையுந்
தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக்
கடைக்கண்ணாற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டஞ்
செய்தானக் கள்வன் மகன்.'
1. யாப்ப, வி. 6-ஆம் சூ. மேற்கோள்.
2. களவழி, 2.
3. கலி, 51.