136

கூவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
தேமா புளிமா மலர்

என்று ஓசையூட்டுக.

1'கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.'
இதனை,
தேமா கருவிளம் தேமா புளிமாங்காய்
தேமா கருவிளம் காசு.

என்று ஓசையூட்டுக.

2'பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.'
இதனை,
கூவிளம் கூவிளம் தேமா கருவிளம்
கூவிளம் கூவிளம் நாள்.

என்று ஓசையூட்டுக. பிறவும் அன்ன.

காசு, நாள், மலர், பிறப்பு என்னும் உதாரணங்கள் வெண்பாவின் ஈற்றின்கண் நிறுத்தி ஓசையூட்டுதற்பொருட்டுச் சொன்னார் எனக் கொள்க.

 (8)

115. ஆசிரியப்பாவின் வகை

ஈற்றயன் முச்சீர் வரினே ரிசையாம்; இணைக்குறட்பா
ஏற்ற குறள்சிந் திடையே வரும்;நிலை மண்டிலப்பாச்
சாற்றிய தன்னே ரடியா லியலும்; தலைநடுவீ(று)
ஆற்றிய பாதத் தகவ லடிமறி மண்டிலமே.

(இ - ள்.) எல்லாவடியும் நாற்சீராய், ஈற்றயலடி முச்சீராய் வருவது நேரிசை ஆசிரியப்பாவாம்; ஈற்றடியும் முதலடியும் நாற்சீராய், இடைசிந்தடியுங் குறளடியுமாய் வருவது இணைக்குறள் ஆசிரியப்பாவாம்; எல்லாவடியும் நாற்சீராய் வருவது நிலைமண்டில ஆசிரியப்பாவாம்; எல்லாவடியும் முதல் நடு இறுதியாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் வழுவாது வருவது அடிமறிமண்டில ஆசிரியப்பாவாம் (எ-று.)


1. திருக்குறள், 984.

2. திருக்குறள், 1121.