அழிவு முண்டே - பின்னும் அவ்விலக்கணத்துள் நிலைமொழி ஈற்றிற்கு அழிவுமுண்டு (எ-று.)
(15)
16.ளகரமெய் வல்லினத்தோடும் நகர மகரங்களோடும் புணர்தலும்,தனி நெடிற்பின் வரும் ளகரமெய் தகரத்தோடு புணர்தலும்
எண்ணிரண் டாமொற்று வன்மைவந் தாற்பின் பியைந்தவைந்தா
நண்ணிய வொற்றாம், நகரம் வரின்முன்மெய் ணவ்வதுவாம்;
தண்ணிய மவ்வந் திடினு மஃதே; தனிநெடிற்பின்
பண்ணிய வொற்றுப்பின் றான்வரப் போமொரு காற்பயின்றே.
(இ-ள்.) எண்ணிரண்டாம் ஒற்று வன்மை வந்தால் பின்பு இயைந்த ஐந்தா நண்ணிய ஒற்றாம் -1ளகாரவொற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் வல்லினம் வந்து புணர்ந்தால், அந்த ளகாரமானது டகாரமாம்;2 நகரம் வரின் முன்மெய் ணவ்வதுவாம் - ளகர வொற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் நகாரம் வந்து புணர்ந்தால், அந்த ளகாரமானது ணகாரமாம்; தண்ணிய மவந்திடினும் அஃதே - 3ளகர வொற்றீற்று நிலைமொழிப் பதத்தின் பின்னர் வருமொழி முதல் மகாரம் வந்து புணர்ந்தால், அந்த ளகாரமானது ணகாரமாம்; தனி நெடில் பின் பண்ணிய ஒற்றுப் பின் 4தான் வரப்போம் ஒருகால் பயின்றே - 5தனி நெடிற்கீழ் நின்ற ளகரவொற்றின் பின்னர் வருமொழி முதல் தகாரம் வந்து புணர்ந்தால், ஆதேசமான டகாரங்களுள் தனிநெடிற்கீழ் வந்த டகாரம் கெடும் (எ-று.)
17. லகரமெய் நகரத்தோடும் யகரத்தோடும் வல்லினத்தோடும் புணர்தலும்,
யகரமெய் நகரத்தோடு புணர்தலும்
பன்மூன்ற தாமுடல் நப்பின் வருமெனி னீற்றெழுத்தாம்;
பன்னேழ தாம்வன்மை பின்வரின்; ஆயிடைத் தவ்வுமஃதாம்;
1. முள் + குறை = முட்குறை
2. முள் + நன்மை = முண்ணன்மை
முள் + நன்று = முண்ணன்று.
3. முள் + முனை = முண்முனை
முள் + மடிந்தது = முண்மடிந்தது.
4. ஈண்டு, 'தவ்வர' என்றிருப்பின் பொருள் பொருந்தும்.
5. வாள் + தீது = வாடீது.
வேள் + தீயன் = வேடீயன்.