140

(இ - ள்.) தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறுறுப்பும் உடையது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா; அராக உறுப்பை நீக்கி ஐந்துறுப்பாலும் வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா; அராகமும் அம்போதரங்கமும் நீக்கி நான்குறுப்பாலும் வருவது நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா; ஈற்றடி முச்சீராய் ஏனையடி நாற்சீராய் வருவது வெண்கலிப்பாவாம்(எ-று.)

வரலாறு:-

'பூமகனே முதலாகப் புகுந்தமர ரெண்டிசையுந்
தூமலரா லடிமலரைத் தொழுதிரந்து வினவியநாள்
காமமுங் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த்
தீமைசால் கட்டுரைக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த
நாமஞ்சார் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச்
சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே;

இஃது ஆறடித் தரவு.

தானமே முதலாகத் தசைபார நிறைத்தருளி
ஊனமொன் றில்லாமை யொழிவின்றி யியற்றினையே;

எண்பத்தொன் பதுசித்தி யியல்பினா லுளவென்று
பண்பொத்த நுண்பொருளைப் பாரறியப் பகர்ந்தனையே;

துப்பியன்ற குணத்தோடு தொழில்களால் வேறுபட
முப்பதின்மே லிரண்டுகலை முறைமையான் மொழிந்தனையே;

இவை இரண்டடி மூன்று தாழிசை.

ஆதியு மிடையினோ டிறுதியு மறிகுவ

தமரரு முனிவரு மரிதுநின் னிலைமையை;

மீதியல் கருடனை விடவர வொடுபகை

விதிமுறை கெடவறம் வெளியுற வருளினை;

தீதியல் புலியது பசிகெடு வகைநின

திருவுரு வருளிய திறமலி பெருமையை;

போதியி னலமலி திருநிழ லதுநனி

பொலிவுற வடியவ ரிடர்கெட வருளினை;

இவை நாலடி அராகம்.

திசைமுகன் மருவிய கமலநன் னிறமென
வசையறு முனிவொடு மலியு நின்னடி;
உயர்வுறு பெருமையொ டயரறு மயர்வொடு
புரையறு நலனொடு பொலியு நின்புகழ்;