143

இவை ஓரடி நான்கு அம்போதரங்கம்.

எனவாங்கு,

இது தனிச்சொல்.

அருள்வீற் றிருந்த திருநிழற் போதி
முழுதுணர் முனிவநிற் பரவுதுந் தொழுதக
ஒருமன மெய்தி யிருவினைப் பிணிவிட
முப்பகை கடந்து நால்வகைப் பொருளுணர்ந்
தோங்குநீ ருலகிடை யாவரும்
நீங்கா வின்பமொடு நீடுவாழ் கெனவே.'

இது சுரிதகம்.

இஃது ஆறடித் தரவு வந்து, அதன்பின்மூன்று தாழிசை வந்து, அதன் பின் அராகம் வந்து, அதன் பின் அம்போதரங்கம் வந்து, அதன் பின் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று வந்த வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா. இதனது வேறுபாடு அறிக.

'மண்வாழும் பல்லுயிரும் வான்வாழு மிமையவருங்
கண்வாழு மானாகர் கிளையனைத்துங் களிகூர
அந்தரதுந் துமியியங்க வமரர்க ணடமாட
இந்திரர்பூ மழைபொழிய விமையவர்சா மரையிரட்ட
முத்தநெடுங் குடைநிழற்கீழ் மூரியா சரியணைமேல்
மெய்த்தவர்கள் போற்றிசைப்ப வீற்றிருந்த வொருபெரியோய்!

இது தரவு.

எறும்புகடை யயன்முதலா வெண்ணிறந்த வென்றுரைக்கப்
பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்யோகி
எவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றா  லிடரெய்தில்
அவ்வுடம்பி னுயிர்க்குயிரா யருள்பொழியுந் திருவுள்ளம்;

அறங்கூறு முலகனைத்துங் குளிர்வளர்க்கு மழைமுழக்கின்
திறங்கூற வரைகதிருஞ் செழுக்கமல நனிநாண
ஒருமைக்க ணீரென்பா னுரைவிரிப்ப வுணர்பொருளால்
அருமைக்கண் மலைவின்றி யடைந்ததுநின் திருவார்த்தை;

இருட்பார வினைநீக்கி யெவ்வுயிர்க்குங் காவலென
அருட்பாரந் தனிசுமந்த வன்றுமுத லின்றளவும்
மதுவொன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோ ரியாவர்க்கும்
பொதுவன்றி நினக்குரித்தோ புண்ணியநின் றிருமேனி;

இவை மூன்றுந் தாழிசை.