கூம்பவுங் கூம்பா தலரவுங் கொண்டியற்றல்
வாய்ந்த வகையுளியின் மாண்பு.'
வரலாறு:-
1 'கடியார்பூங் கோதை கடாயினான் திண்டேர்
சிறியார்தஞ் சிற்றில் சிதைத்து.'
இதனுள் 'கடியார்' என்றும் 'பூங்கோதை' என்றும் 'கடாயினான்' என்றும் அலகிட "ஒன்று மிடைச்சீர் வருஞ்சீ ரொடுமுதல் சீர்கள் தெற்றும்" என்னுஞ் சூத்திரத்தோடு மாறுபட்டு வெண்பாத்தன்மை கெடுமாதலால், 'கடியார் பூ' என்று புளிமாங்காயாகவும், 'கோதை' என்று தேமா ஆகவும், 'கடாயினான்' என்று கருவிளம் ஆகவும் அலகிடச் சிதையாதாம்.
2'மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.'
இதனுள் 'நீடு' என்றும், 'வாழ்வார்' என்றும் அலகிடில் 'ஒன்று மிடைச்சீர் வருஞ்சீ ரொடுமுதற் சீர்கள்தெற்றும்' என்னுஞ் சூத்திரத்துள் 'நன்று மலர் காசு நாள் பிறப்பு என்றிற்ற சிந்தடியே துன்றும்' என்பதனோடு மாறுபடுமாதலால், 'நிலமிசை' என்று கருவிள மாகவும் 'நீடுவாழ்' என்று கூவிளமாகவும், 'வார்' என்று நாளாகவும் அலகிடுக. 'அளபெடை நீத்தலும்' என்பதனால், அலகு பெறாதே வருமாறு:
3'இடைநுடங்க வீர்ங்கோதை பின்தாழ வாட்கண்
புடைபெயரப் போழ்வாய் திறந்து - கடைகடையின்
உப்போஒ வெனவுரைத்து மீள்வா ளொளிமுறுவற்
கொப்போநீர் வேலி யுலகு.'
'உப்போஒ' என்புழி அளபெடை அனுகரணம் வந்தது. அன்றேல், இடைச்சீர் தெற்றி, 'ஒன்று மிடைச்சீர்' என்னுஞ் சூத்திரத்துள் 'ஒன்றும்' என்னும் இலக்கணத்தோடு மாறுபடுமாதலான், 'மிக்ககூன் விதிமுறை வகுத்தல்' என்னுஞ் சூத்திரத்து 'அளபெடை நீத்தலும்' என்றபடி நீக்கச் சிதையாதாம்.
1. யாப்ப - வி. 95-ஆம் சூ. மேற்கோள்.
2. திருக்குறள், 3.
3. யாப்ப - வி. 4-ஆம் சூ. மேற்கோள்.