160

இது ஐந்தடியாய் ஈற்றடி ஒருசீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.

1'முழங்குதிரைக் கொற்கைவேந்தன் முழுதுலகு மேவல்செய முறைசெய் கோமான்
வழங்குதிறல் வாண்மாறன் மாச்செழியன் தாக்கரிய வைவேல் பாடிக்
கலங்கிநின் றாரெலாங் கருதலா காவணம்
இலங்குவா ளிரண்டினா லிருகைவீ சிப்பெயர்ந்
தலங்கனன் மாலை யவிழ்ந்தாட வாடுமிவள்
பொலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம்
விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே.

இஃதேழடியாய் ஈற்றடி இரண்டு சீர் குறைந்து வந்த வேற்றொலி வெண்டுறை; பிறவுமன்ன. முதலடியொழித்தெல்லாம் ஈற்றடி எனப்படும். இவ்வினமெல்லாவற்றுள்ளும் மூன்றடியால் வரும் விருத்தமும், துறையும், தாழிசையும் சிந்தியல் வெண்பாவின் இனம் என்றும், நான்கடி விருத்தம் தனிச்சொல்லுடைத்தாயின், நேரிசை வெண்பாவின் இனம் என்றும், நான்கடியால் வரும் துறை இன்னிசை வெண்பாவின் இனம் என்றும், மிக்கு வந்தன பஃறொடை வெண்பாவின் இனம் என்றும் வழங்குவாருமுளர்.

(15)

122. ஆசிரியத்தாழிசையும், ஆசிரியத்துறையும், ஆசிரிய விருத்தமும்

மூன்றடி யொப்பன தாழிசை; நான்காய்க் கடையயற்கண்
ஏன்றடி நைந்து மிடைமடக் காயு மிடையிடையே
தோன்றடி குன்றியு மாகுந் துறை;தொல் கழிநெடிலாய்
ஆன்றடி நான்கொத் திடிலா சிரிய விருத்தமன்றே.

(இ - ள்.) மூன்றடியாய்த் தம்முள் அளவொத்து வரின் ஆசிரியத் தாழிசையாம்; அவை ஒருபொருண்மேன் மூன்றடுக்கியுந் தனியும் வரும். நான்கடியாய் ஈற்றயல் குறைந்து வருவதுவும், இடைமடக்காய் வருவதுவும், இடை குறைந்து வருவதுவும், எனவிவை ஆசிரியத்துறையாம்; உம்மையால் இடையடி இரண்டு மிக்குவருவதுவும், இடையிடை இரண்டு குறைந்து வருவதுவும், முதலடி குறைந்து வருவதுவும்,  கழிநெடிலடியாய் வருவதுவும், பலவிகற்பத்தான் வருவதுவுங் கொள்க. கழிநெடிலடி நான்காய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரிய விருத்தமாம் (எ-று.)


1. யாப்ப . வி. 67-ஆம் சூ. மேற்கோள்.