'உரைத்த பாவினுக் கொத்த வடிகள்
வகுத்துரை பெற்றி யன்றிப் பிறவு
நடக்கு மாண நடத்தை யுள்ளே.
என்றார் காக்கைபாடினியார்.
'ஒத்த வடியினு மொவ்வா விகற்பினு
மிக்க வடிவரினு மப்பாற் படுமே.
என்றார் அவிநயனார்.
'பாவு மினமு மேவின வன்றியும்
வேறுபட நடந்துங் கூறுபட வரினும்
ஆறறி புலவ ரறிந்தனர் கொளலே.
என்றார் மயேசுவரனார் எனக் கொள்க. 'ஒன்று மிடைச்சீர் வருஞ்சீரோடு' என்னுஞ் சூத்திரமுதலாகத் 'துன்னுங் குறளடி நான்கு' எனுஞ் சூத்திரமீறாய்க் கிடந்த சூத்திரம் எல்லாம் ஒருசாராசிரியர் மதமெனக் கொண்டு இவையிற்றுக்குக் குற்றங்காட்டுதற்கு எடுத்தோதினான் என்க. குற்றங் காட்டுமாறு:-
நாலு பாக்களுக்கு நால் ஓசை என்று கூறுபடுத்து, வெண்பாக்களுக்குச் செப்பலோசையென்றாக்கி, அதனையலகிட்டு ஓசையூட்டுக என்று இலக்கணஞ் சொன்னார். ஓசையாவது, செவிப்புலனே கருவியாக அறிவது என்பது எல்லார்க்கும் உடம்பாடாதலாம். அஃதறியும் இடத்து,
1'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்.
2'கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.
3'உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
என்று இத்தொடக்கத்தனவற்றைச் செவிப்புலனே கருவியாக ஆராய்ந்த பொழுது ஓசை இனியவாய் இருக்கும்; அலகிட்டு ஓசையூட்டில் அவை ஓசையுண்ணா என்றால், அற்றன்று; இவற்றின்கண் அளபெடை உண்டாகவே ஓசையுண்ணுமெனில், அளபெடையின்றியேயும் ஓசை இனியனவாக இருந்தன என்க. அன்றியும் தேமா முதலாகிய உதாரணங்களால் ஓசையூட்டில்,
1. திருக்குறள், 2.
2. திருக்குறள்--1087
3. திருக்குறள்--1200