(இ-ள்.) நெட்டெழுத்தும், நெடிலொற்றும், குறிலொற்றும் குருவென்பர்; அஃது இரண்டலகுடைத்தாகி இளம்பிறை போன்ற குறியினைப் பெறும்; குற்றெழுத்து இலகுவாம்; அஃது ஓரலகு உடைத்தாய், நேரே கீழ்நோக்கி வலிக்கப்பட்ட ஒரு கீற்றினைப் பெறும்; ஈற்றின்கண் நின்ற பொழுது குருவாகையும் ஒருகாலுண்டு. (எ-று.)
இனிச் சந்தங்களுக்குப் பிரத்தாரமுதல் ஆறுதெளிவுகளுஞ் சொல்லுகின்றான்.
(26).
133. பிரத்தார முதல் ஆறு தெளிவு
ஒப்பா ருறழ்ச்சியுங் கேடுமுத் திட்டமு மொன்றிரண்டே
னப்பா லிலகு குருச்செய் கையுமந்தச் சந்தங்களால்
துப்பார் தொகையு நிலவ ளவுமென்று சொல்லிவைத்தார்
செப்பார் தெளிவுக ளாறையுஞ் சீறடித் தேமொழியே !
(இ-ள்.) உறழ்ச்சியும், கேடும், உத்திட்டமும், ஓரிலகுடையன இன்னதனைச் சந்தம் ஒரு குருவுடையன இன்னதனைச் சந்தம் இரண்டிலகுடையன இன்னதனைச் சந்தம் இரண்டு குருவுடையன இன்னதனைச் சந்தம் என்றிப்படிச் சந்தத்தளவும் ஏறச்சொல்லும் *இலகு குருச் செய்கையும், முதற் சந்தத்துக்கு விரிவின்னதனையும் இரண்டாஞ் சந்தத்திற்கு விரிவின்னதனையும் என்றிப்படி இருபத்தாறளவுமேற்றிச் சொல்லும் விருத்தத் தொகையும், முதற் சந்தம் இன்னதனை நிலத்தில் உறழலாம் இரண்டாஞ்சந்தம் இன்னதனை நிலத்தில் உறழலாம் மூன்றாஞ்சந்தம் இன்னதனை நிலத்தில் உறழலாம் என்றிப்படி இருபத்தாறாஞ் சந்தத்தளவும் ஏற்றிச் சொல்லும் நில அளவும் தெளிவுகளாம் (எ - று.)
உறழ்ச்சி எனினும் பிரத்தாரம் எனினும், ஒக்கும்; நட்டமெனினும் கேடெனினும் ஒக்கும்; உத்திட்டம் எனினும் நித்திட்டம் எனினும் ஒக்கும்.
(27)
134. சந்தங்களைப் பிரத்தரித்துக் காட்டுதல்
ஆதி யினிற்குருப் பாதம்வைத் தாதிக் குருவதன்கீழ்
ஓதிய சீரில குத்தன்னை யாக்கி யொழிந்தவற்றை
மூதியன் மேற்படிக் கொப்பித்து முன்புறப் பாழ்கிடக்கின்
தீதிய லாக்குருக் கொண்டே மறைக்க திறப்படவே.
* 'இதனை வடநூலார் ஏகத்துவியாதிலகக்கிரியை என்பர்,' என்பது பழைய குறிப்பு.