190

இது நான்கடியுந் தம்முள் எழுத்தொத்து, முன்னிரண்டடியுந் தம்முள் எழுத்தும் ஒத்து மாத்திரையும் ஒத்து, முதலடியும் மூன்றாமடியும் தம்முள் அலகு நிலை ஒத்து, வேறுபட்டு வந்தது. இவ்வாறு வருவனவற்றுள் வேறுபாடறிந்து பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

இனி விருத்தமாவன,

"எழுத்தினா லொத்த லியையாதுந் தம்மி
லெழுத்து மலகு மியையா--வழுத்து
மனைத்து மளவா மடிநான்காய்ச் சாற்றி
லனைத்தும் வியமமென்றா ராய்ந்து."

என்பதனால் நான்கடியும் எழுத்தொத்து அலகு நிலை ஒவ்வாது வருவனவும், எழுத்தும் அலகும் தம்முளியையாது வருவனவும் அளவடி விருத்தம் எனப்படும். அளவடி எனினும் வியமம் எனினும் ஒக்கும். அவற்றுட்சில வருமாறு:

"கொள்ளுங் கூற்றி னினைந்துணர் வுசிறி
துள்ள நிற்க வொழிந்திடு மாறுபோல்
வள்ளல் தரள வனவ லையுளக்
கள்வ ரைவரு மென்றே கரந்திட்டார்."

இது நான்கடியுந் தம்மில் எழுத்து ஒத்து, அலகு ஒவ்வாது வந்தது.

"சொற்றவா வளவி னுளவா வெனுந்தடத்
திற்றவா யில்லதெஞ் ஞான்று முள்ளது
சொற்றவாண் மனத்தினா லுறுவிப் பின்னரே
மற்றவா னோக்கினான் மடங்கல் மொய்ம்பினான்."

இது நான்கடியும் தம்மில் எழுத்தும் அலகும் ஒவ்வாது வந்தது. பிறவுமன்ன.

இனி மேலே கூறிய ஆரியை, வைதாளியை என்பனவற்றின் விகற்பம் வருமாறு சொல்லுதும்:

அவற்றுள் ஆரியை வருமாறு:-

"குறில்போல்ஐ இஉக் குறுக்க நெடில்போ
லுறுநீட் டிலகுகுரு வென்றும்--பொறையளந்தா
னீச னெனவு மிவையிரண்டு மிம்முறையாற்
பேசப் பெறுவ பெயர்."