இவையிற்றையே மாறாக வேண்டுவர் கவுடரென்னும் புலவர். (எ-று.)
(6)
149. பிராணனாகிய பொருளே அலங்காரம் என்பது
ஒப்பார் பொருளே யுயிரா னமையி னுரைத்தவற்றைத்
துப்பா ரலங்கார மாகத் தொகுக்கச்சொல் லும்பொருளுஞ்
செப்பார் தரமுற்றி லேயலங் காரந் திகழ்வதன்றேல்
தப்பார் தருமென்று கண்டுரைத் தார்பண்டு தண்டிகளே.
(இ-ள்.) பொருளையே பிராணனாகக் கொண்டார் ஆகலின், மேற்சொல்லப்பட்ட பிராணன்களையே அலங்காரம் என்பது இந்நூலுடையார்க்குத் துணிவு. இது, 'தண்டியார் சொன்னபடியே சொல்லுவன்,' என்று எடுத்துக்கொண்ட மேற்கோளொடு மாறுகொள்ளும் எனில், அலங்காரங்களை அல்லாது பிராணன்களை அவர் சொன்னபடி சொல்லுவன் என்னாமையான், மாறு கொள்ளாது என மறுக்க. இனி இளகி இருந்த சொல்லும் இளகி இருந்த பொருளும் இன்றி முற்றிய பொழுதே அலங்காரங்கள் விளங்குவது என்பது தண்டியார்க்கும் உடன்பாடாம் (எ-று.)
'என் போல?' எனின், உயிர்க்கண்ணும் உடற்கண்ணும் குற்றம் உடையாள் ஒருத்தி ஆபரணம் பூண்டால் விளங்காதவாறு போல என்பது. அது மூக்கும் கண்ணும் முதலிய உறுப்புக் குறைந்தாளும், சாகைக்கண்ணுமையமும் முதலாகிய உயிர் நோவுகளை உடையாளும் ஆபரணங்களால் விளங்காதவாறு போல எனக் கொள்க.
வரலாறு:-
"தம்மோக மில்லெனினுந் தம்மைமோ கித்தவர்கள்
தம்மோகந் தீர்ப்பதுவுந் தன்மைக்கண்."
என முற்றாத சொல்லானும் இளகி இருந்த பொருளானும் வந்தமையாற் குற்றமாயிற்று எனக் கொள்க.
(7)
150. சிலீட்டம் முதலிய உயிர் ஆமாறு
செறிவார் சிலீட்டம்; தொகைமிகை யாம்ஓகம்; சீர்ச்சமதை
அறிவா ரடியொப்ப தாகும்; சமாதி யவனிக்கொப்பப்
பிறிவார் குணமொன்ற தொன்றிற் கிடப்பன; மென்மையொன்றின்,
நெறிவார் குழலி! சுகுமா ரதையென்று நேர்ந்துரையே.
(இ-ள்.) சிலீட்டம் என்னும் உயிர், சொற்செறிபுடைத்தாம்; ஓகம் என்னுமுயிர், முழுதும் ஒரு மதமாகத் தொகுத்த தொகை.