206

வரலாறு:-

"கதிர்த்தா ரகையும்வெண் டிங்களு மாகவெய் யோனைக்கையாற்
பிதிர்த்தா ருளர்பெரும் பாலுடன் றாங்கிற்பின் றாக்கவியோ
டெதிர்த்தாரை வென்றண்ட மூடுநின் றானருள் போலுந்தன்மை
யுதிர்த்தா ரழல்கங்கு லாயெங்கும் பெற்ற தொளிவிசும்பே."

இது நான்கடியும் எதுகையும், வழி மொழியும், பொருட்பொலிவும் பெற்று நயன் ஒப்ப முடிந்தமையால், இன்பம் என்னும் உயிரலங்காரமாய் நின்றது. இதனைத் தண்டியார் மாதுரியம் என்பர். காந்தியென்னும் உயிர் சிறப்புடைமையால், தனித்து இலக்கணஞ்சொன்னார் எனக்கொள்க. அவை பத்துந் தண்டிகளுயிராயின. இந்நூலுடையார் அலங்காரமாய் நிறுவலால், உயிர் அலங்காரமாயிற்றென்க. இனித் தன்மை முதலிய அலங்காரம் ஆமாறு சொல்லுகின்றான்.

(9)

152. தன்மை, உவமை, உருவகம், தீபகம் என்னும் அணிகள் ஆமாறு

திரப்பியஞ் சாதி தொழில்குண மாந்தன்மை; சீருவமை
பரப்பிய வொப்பாம்; உருவக மாவ ததன்றிரிவு;
கரப்பிய சொல்லெங்கு மொன்றே யுபகார மேல்விளக்கு;
நிரப்பிய மீட்சியு மற்றதன் போலி நிரைவளையே!

(இ-ள்.) திரப்பியத் தன்மையும் சாதித் தன்மையும் தொழில் தன்மையும் குணத் தன்மையும் எனத் தன்மையென்னும் அலங்காரம் நான்கு வகைப்படும்; தன்மையாவது, இயல்பெனக் கொள்க; உவமையென்னும் அலங்காரமாவது, பழித்துத்தான் பட்டாங்கு சொல்லித்தான் ஒன்றோடொன்று உவமிக்கும் இடத்து உவமைக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் பொதுவாய் நின்றதொரு பண்பு பற்றி வரும் எனக் கொள்க; 'கடல் போன்றது படை,' என்றது உவமையாம். 1'படைக் கடல்' என்று படையைக் கடலாக வியந்துவரின் உருவகமாமெனக் கொள்க. ஒரு சொல்லே கவிக்கெங்கும் உபகாரமாய் நின்றது தீபகமாம்2. (எ-று.)

வரலாறு:-

"கறைமிடற்றர் கையிற் கபாலத்தர் வெள்ளைப்
பிறைமுடியர் பின்றாழ் சடையர்--பொறிவிரவு


1. இது முன்பதிப்பில் 'கடற்படை' என்றிருந்தது.

2. 'நிரம்பிய மீட்சியு மற்றதன் போலி' என்பதற்கு ஈண்டுப்பொருள் காணப்படவில்லை.