*"இளங்கடை யிடைதலை யென்னும் மூன்றினும்
விளங்கா நின்றது விளக்கெனப் படுமே."
இதனைத் தண்டியார் தீபகம் என்று சொல்லுவர். அஃது ஆதி அந்தம் மத்தியம் மூன்றிடத்தும்வரும். ஆதி தீபகமாவது, முதலின் கண் நின்ற சொல் எல்லாவிடத்தும் பொருள்கொள நிற்பது. மத்திய தீபகமாவது, நடுவு நின்ற சொல் எல்லாவிடத்தும் பொருள் கொள நிற்பது.
"தொல்காப் பியப்புலவர் தோன்ற விரித்துரைத்தார்
பல்காய னார்வகுத்துப் பன்னினார்--நல்யாப்புக்
கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார்
சொற்றார்தந் நூலிற் றொகுத்து."
இதில் உரைத்தார், பன்னினார், சொற்றார் என மீண்டு வந்த சொன் மூன்றும், சொன்னார் என்னும் பொருளொன்றையே விளக்கினமையால், பொருண்மீட்சி என்னும் அலங்காரமாயிற்று.
"இந்திர னேறக் கரியளித் தார்பரி யேழளித்தார்
செந்திரு மேனித் தினகரற் குச்சிவ னார்மணத்துப்
பைந்துகி லேறப்பல் லக்களித் தார்பழை யாறைநகர்ச்
சுந்தரச் சோழரை யாவரொப் பார்களித் தொன்னிலத்தே!"
என வருவது பதமீட்சி.
"பொருளே மீள்வது பொருளின் மீட்சி;
பதமே மீள்வது பதத்தின் மீட்சி;
இரண்டு மீள்வ திருகை மீட்சி."
எனக் கொள்க.
"வீரர் களிறேற வெல்வேந்தர் தேரேறப்
போர்கெழு வெஞ்சிலைநாண் பூட்டேற--வார்முரச
மார்ப்பேற வேலிளைஞர் மாவேற வெஞ்சுடர்வாள்
கூர்ப்பேற வேறினான் குன்று."
இதில் 'ஏற' என்று ஒரு பதமே மீள வந்தமையால், பதமீட்சி என்னும் அலங்காரமாயிற்று. இருகை மீட்சி வந்தவழிக் கண்டு கொள்க.
(10)
*"மீட்சியே முதுமையதாதலின், இளமை என்றார்," என்பது பழைய குறிப்பு.