இது செவ்வாய் முதலிய கோட்களைப் பன்னிரண்டு இராசிக்கும் நாயகராக அடைவே வைத்துச் சொன்னமையால், அடைவாயிற்று. இதனை நிரனிறை எனினுமாம். இதனைப் பெயர் நிரனிறை, வினை நிரனிறை, எதிர் நிரனிறை, மயக்க நிரனிறை, உய்த்துணர் நிரனிறை என்று பல விகற்பங்களாலும் வேறுபடுப்பாரும் உளரெனக் கொள்க.
1"தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு."
இது மகிழ்ந்து சொன்னமையால், மகிழ்ச்சியாயிற்று.
"அடைவே நிரனிறை யாகு மாங்குத்
திடமுற மகிழ்ந்து செப்புதன் மகிழ்ச்சி."
எனக் கொள்க. இனிச் சுவையாவது, சிருங்கார முதலாகவுடைய நாடகச்சுவை ஒன்பதும் எனக் கொள்க.
வரலாறு:-
2"ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ விரா."
இது சிருங்காரம்.
3"கைவேல் களிற்றொடும் போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்."
இது வீரம்.
"கலைகா னெகிழ்ந்து குழலுஞ் சரிந்து வளைகழல
முலைகால் பசந்துமுன் போலா லிவண்முனை வெம்பணைக்கைச்
சிலைகால் வளைவித்த மாறன்றெவ் வேந்திற்செவ் வேளுறையு
மலைகா லருவிசென் றாடின ளோமற்றிவ் வாயிழையே."
இது *விகாரம். பிறவுமன்ன.
1. திருக்குறள், 1107.
2. திருக்குறள், 1329.
3. திருக்குறள், 774.
*"இது சிங்காரம், ஆசியம், கருணை, இரவுத்திரம், வீரம், பயானகம், குச்சை, அற்புதம், சாந்தம் என இலக்கண நூலாரால் வகுக்கப் பட்ட ஒன்பது சுவையில் ஒன்று அன்று. ஆயினும், விபாவமெனவும், அனுபாவம் எனவும், சஞ்சரி பாவம் எனவுங் காரணகாரிய உடனிகழ்வு இயைபுள்ள மெய்ப்பாடுகளாற் பிறந்து வெளிப்பட்டுச் சந்தர்ப்பித்து நடைபெறுவதே சுவையாதலின், மெய்ப்பாட்டின்பாலதாகிய விகாரத்தைச் சுவை என்றெடுத்துக் கூறியது குற்றமன்று. அன்றியுங் காரணவாகு பெயராகக் கொள்ளினும் அமையும் எனக் கொள்க," என்பது பழைய குறிப்பு.