"மெய்ப்பொரு ளேற வியம்பிய விரண்டையுந்
திட்பங் கூறுதல் சிலேடை யாகும்."
எனக் கொள்க.
இனிச் சிறப்பு என்னுமலங்காரமாவது, குணமும் சாதியும் உடையவற்றால் வேறுபடுத்துச் சிறப்பித்தல்.
"கரும்பேதன் கைச்சிலையுங் காமர் கணையு
மரும்பே சுரும்பேநா ணன்றாற்--பெரும்பேய்க்
கணத்தானைப் போர்வென்று காரிகையா ரோடு
மணத்தான மேற்றுவித்தான் வந்து."
என இது இப்படி உள்ளானாகிலும் இப்படிச் செய்தானென்று சிறப்பித்தலால், சிறப்பாயிற்று.
"சாதியுங் குணமுங் கிரியையும் பொருந்த
மேதகு சிறப்பின் விளம்புதல் சிறப்பே."
எனக் கொள்க.
"உள்ளிய வுள்ளியாங் கீயு முயர்விற்றாங்
கள்ளவிழ் பூஞ்சோலைக் கற்பகமும்--வள்ளல்
வளையாய் புனனாடன் மானவே னின்று
முளவாக வாடா துலகு."
இது கருதின குணங்களை உடன்கூட்டி ஒப்பித்தலால், உடனிலைக் கூட்டமாயிற்று.
"பெரியத னோடு செயலா லிழிந்ததை
யுரிய தாக்குத லுடனிலைக் கூட்டம்."
எனக் கொள்க.
1"நல்லா றெனினுங் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று."
என இதனுள் தீதென்றும் நன்றென்றும் வந்தமையான், முரண் என்னும் அலங்காரமாயிற்று. இதனையே சொல்லுஞ் சொல்லு மறுதலிக்கு முரணும், பொருளும்பொருளு மறுதலிக்கு முரணும் என வேறுபடுப்பாரும் உளர்.
"பொருளினு மொழியினும் பொருந்தக் காட்சியின்
முரணக் கூறுதல் முரணென மொழிப."
எனக் கொள்க.
1. திருக்குறள், 222.