220

"வெய்ய சுடரானும் வீரை வெறாதானுஞ்
செய்ய வொளியர் திறலுடையர்--வெய்யசுட
ராழியான் கங்குல் விளக்கா னனையனோ
கோழியனோ கூடலார் கோ."

என இதனுள் ஞாயிற்றோடு ஒக்க அவன் வழியரசனையும் விதந்து வேற்றுமை காட்டலில், விரவியல் ஆயிற்று.

"பரவியல் பல்லலங் காரம் பட்டன
விரவிய லென்று வேண்டுவ ரென்ப."

எனக் கொள்க. 'விரா' எனினும், 'விரவியல்' எனினுமொக்கும்.

இனிப் பாவிகமாவது, அகலக்கவிப்புலவன் கருத்து. அஃது குண்டலகேசி, உதயணன் கதை முதலாயினவற்றுள் கண்டு கொள்க.

154, 155. உவமையின் வகைகள்

புகழ்ச்சி பழிப்பு, விரோதங், கருத்திசை யுண்மையையும்
இகழ்ச்சி யெதிர்ப்பொரு ளற்புத நோக்கித ரேதரந்தா
னிகழ்ச்சி மிகைபண் புயர்வு நியம மநியமமுந்
திகழ்ச்சி மலிதடை தெற்றுச் சிலேடை துணிவென்பரே.

உம்மை பொருளினொ டொப்புமை கூட்ட மபூதத்தொடு
செம்மை திகழ்வாக் கியப்பொருள் கோவைதிண் காரணமும்
வெம்மை மயக்கம் பலவியல் விக்கிரி யத்தினொடு
மெய்ம்மையிற் சந்தா னமுமென் றுவமை விகற்பிப்பரே.

(இ-ள்.) இஃதியல்புப் புகழ்ச்சியுவமையும், பழிப்புவமையும், விரோதவுவமையும், கருத்துவமையும், இசையுவமையும், உண்மையுவமையும், ஐயவுவமையும், இகழ்ச்சியுவமையும், எதிர்ப்பொருளுவமையும், அற்புதவுவமையும், நோக்குவமையும், இதரேதரவுவமையும், மிகையுவமையும், பண்புவமையும், உயர்வுவமையும், நியமவுவமையும், அநியமவுவமையும், தடையுவமையும், தெற்றுவமையும், சிலேடையுவமையும், துணிவுவமையும், உம்மையுவமையும், பொருளுவமையும், ஒப்புவமையும், கூட்டவுவமையும், அபூதவுவமையும், வாக்கியப்பொருளுவமையும், கோவையுவமையும், காரணவுவமையும், மயக்கவுவமையும், பலவியலுவமையும், விக்கிரியவுவமையும், சந்தானவுவமையும் என உவமை என்னும் அலங்காரத்தை முப்பத்து மூன்றாக விகற்பிப்பர் (எ - று.)