"இப்படி யென்ப தியம்பிய துடைமையி
லப்பொரு வாமெனு மற்புத வுவமை."
எனக் கொள்க.
"நானோ விவண்முகத்துக் கொப்பெனு நன்மதியுங்
கான்மலி பங்கயமுங் காண்."
இது புலவன் குறிப்பாதலின், நோக்குவமை.
"சாலும் பொருட்கெதிர் பொருவெனும் பொருண்மொழி
நூலோர் நோக்குத னோக்கெனப் படுமே."
எனக் கொள்க.
"பங்கயத்தோ டொக்குநின் கைத்தலம் பங்கய
நின்கையோ டொப்பெனவு மாம்."
இஃது ஒன்றோடொன் றுவமித்தலால் இதரேதரவுவமை.
"மேதக வெதிரெதிர் விளம்பிய பொருளு
மெதிரும் பொருவுத லிதரே தரமே."
எனக் கொள்க."நின்முகங் கண்டதுவு நின்கண்ணே திங்களையும்
விண்மிசையே கண்டதுவு மிக்கு."
இது மிகையுவமை.
"இவ்வயிற் கண்டது பொருளையும் பொருவையு
மிவ்வயிற் கண்டதென் பதுமிகை யுவமை."
எனக் கொள்க. இதனைத் தண்டியார் அதிசயவுவமை என்று சொல்லுவர்.
"தாமரையே போற்செய்ய தாமக் கருங்குழலி
காமருவு நின்கைத் தலம்."
இஃது ஒத்த பண்பு சொல்லி உவமித்தமையால், பண்புவமை.
"ஒண்பொருள் வரவவ் வுவமையோ டொன்றிய
பண்பொடு வருதல் பண்பெனப் படுமே."
எனக் கொள்க.
"நின்முகந் திங்களையுந் தாமரையை யுங்கடந்து
தன்னையே யொத்தது தான்."
இஃது உயரச்சொன்னமையால், உயர்புவமை.