226

1"வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று."

இஃது இல்லாதது சொன்னமையான், அபூதவுவமை.

"விடாதவப் பொருட்கு விதிசே ருவமை
யடாத தியம்புத லபூத வுவமை."

எனக் கொள்க.

வாக்கியப் பொருளுவமையாவது, வாக்கியப்பொருளான் உவமை விளக்குதல். வாக்கியமாவது, பல பதங் கூடியிருப்பது. இதனைத் தொடர்மொழியெனவும் அமையும். அது வருமாறு:

"வெண்ணிலவுந் தண்ணளியு மென்மையுஞ் சேருமா
லண்ண லதுவெண் குடை."

"பழுதி லுவமைப் பலபதஞ் சேர்மொழிப்
பொருளில் விளக்கம் புணர்ப்பது வாக்கியம்."

எனக் கொள்க.

"வேலொப் பனவெங் கணையொப் பனதடஞ்
சேலொப் பனமங் கையர்சே யரிக்கணே."

இது நிரையிற் சொன்னமையால், கோவையுவமை.

"பண்டை யோருரை பலபொரு டமக்குக்
கொண்டு கூறுதல் கோவையென் றனரே."

எனக் கொள்க.

"வீரியத்தால் வெய்யோன் வெகுளியா னூழித்தீக்
காரியத்தாற் சாணக் கியன்."

இஃது ஏதுக் காட்டி 'இவற்றால்' என்றமையால், ஏதுவுவமை. இதனைக் காரணவுவமை எனினும் அமையும்.

"இதனா லிப்பொரு ளொக்கு மெனக்குணந்
துதியாற் சொல்லுத லேது வுவமை."

எனக் கொள்க.

"மதியு மடந்தை முகனு மறியாப்
பதியிற் கலங்கிய மீன்."

இது மயக்கவுவமை.

"இதுபொரு ளதுபொரு வென்றுணர்த் திலமென
வுவமையின் மலைவினை யுரைப்பது மயக்கே."

எனக் கொள்க.


1. திருக்குறள், 273.