இலையாரந் தாதுறைக்கு மின்பொதியிற் கோமான்
மலையாரந் தாமலைத்த மார்பு."
இஃது மார்பினது தன்மையைச் செய்குன்றினாலும், மந்தாரச் சோலையாலும் காட்டினமையாகச் சொன்னமையால், உவமையுருவக மாயிற்று.
"பொருளின் மெய்ம்மை காட்டிப் பொருளை
யுருவி னுவலின துவமை யுருவகம்."
இனி ஒற்றுமை மொழி வருமாறு:-
"அருங்கல முலகின் மிக்க வரசற்கே யுரிய வன்றிப்
பெருங்கல முடைய ரேனும் பிறர்க்கவை செய்க லாகா
விருங்கலி முழவுத் தோளா யெரிமணிப் பலகை மேலோர்
நெருங்கொலி யுருவங் கண்டு நின்னையா னினைந்து வந்தேன்."
இது அரசற்குரிமை நிகழும் பொருண்மேற்று ஆதலால், ஒற்றுமை மொழிதல் ஆயிற்று.
158,159. உருவக அணியின் வகை
தெற்றுத் தொகையவ் வியமேதுப் பண்பு விரியுவமை
மற்றுச் சிலேடை சகல மியைபு வரப்புணர்ந்த
முற்றுத் தொகைவிரி தன்னோ டவயவி முந்துறுப்புப்
பெற்றுப் பயிறத்து வாபனந் தன்னோ டியைபிலியே.
தாக்குஞ் சமாதான மேவிதி ரேகந் தடைமொழியும்
ஊக்கு முருவகத் தோடொன் றுருவக மேகாங்கமென்
றாக்கு முருவக மைந்நான்கொன் றாம்பிற வந்தனவும்
நீக்கு வனவிட்டுத் தொல்லோ ருரைப்படி நேர்ந்தறியே.
(இ-ள்.) தெற்றுருவகம், தொகையுருவகம், அவ்வியவுருவகம், ஏதுருவகம், பண்புருவகம், விரியுருவகம், உவமையுருவகம், சிலேடையுருவகம், சகலவுருவகம், இயைபுருவகம், முற்றுருவகம், தொகைவிரியுருவகம், அவயவியுருவகம், உறுப்புருவகம், தத்துவாபனவுருவகம், இயைபிலியுருவகம், சமாதானவுருவகம், விதிரேகவுருவகம், தடைமொழியுருவகம், உருவகவுருவகம், ஏகாங்கவுருவகம் என இருபத்தோர் உருவகமுள. மற்றும் வருவனவும் அறிந்துகொள்க (எ-று.)
1. சூளா. கல்யாணச் சருக்கம், 189.