ஒருபொருட் கேற வுருவகம் பலமொழி
தருமெனி லுருவகஞ் சகல மாகும்."
எனக் கொள்க.
1"காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு
நல்லாண்மை யென்னும் புணை."
இது பொருந்து மென்பதனால், இயைபுருவகம்.
"அசைவில் கருவி யவற்றாற் றொழிலி
லிசையு மென்ப தியைபுரு வகமே"
எனக் கொள்க. இதுவே, 'காமக் கடும்புனல்' என்னுந் தொகை யுருவகமும், 'நாணொடு நல்லாண்மை யென்னும் புணை' என்னும் விரியுருவகமும் வந்தமையால், தொகைவிரியுருவகம் ஆயிற்று.
"தொகையும் விரியுந் தொக்குடன் கிளப்பது
தொகைவிரி யென்று சொல்லினர் புலவர்"
எனக் கொள்க.
"விழியே களிவண்டு மென்னகையே தாது
மொழியே முருகுலாந் தேறல்--பொழிகின்ற
தேமருவு கோதைத் தெரிவை திருமுகமே
தாமரையென் னுள்ளத் தடத்து".
இது முற்றுருவகம்.
"சொற்ற வவயவ வவயவி யிடம்பிற
முற்ற வுரைப்பது முற்றுரு வகமே"
எனக் கொள்க.
"மாதராய் நின்றன் முகக்கமலத் துள்வளைந்த
கோதில் புருவமுங் கூனுதலுந்--தீதி
லுருக்குறி யொப்புமீண் டோடியிமைக் குஞ்சே
யரிக்கண்ணு நோய்செய் தன."
இஃது உறுப்புக்களை வேறுபடுத்து உருவகஞ் செய்யாது அவ்வுறுப்புக்களையுடைய அவயவியை வேறு சொன்னமையால், அவயவியுருவகம் ஆயிற்று.
"இயையு முறுப்பொழித் துறுப்புடைப் பொருளை
யமைய வுரைத்த லவயவி யுருவகம்".
எனக் கொள்க.
1. திருக்குறள்,1134.