இது உடன்பட்டாற்போலத் தடுத்தமையால், உடன்பாட்டுத்தடைமொழி.
'கண்ணு மனமுங் கவர்ந்தவ ளாடிடமென்
றெண்ண லருளு மடையாளந்--தண்ணிழலின்
சுற்றெல்லை கொண்டுசுழல் சோதித் திரளல்லான்
மற்றில்லை காணும் வடிவு.'
இது பொருள் தோன்றத் தடுத்தமையால், பொருள்தடைமொழி.
'பின்னும் எப்பண்பு கொண்ட விகற்பம்' என்றமையால்,
'செல்லு நெறியனைத்துஞ் சேம நெறியாக
மல்க நிதியம் வளஞ்சிறக்க-- வெல்லு
மடற்றேர் விடலா யகன்றுறையி னாங்கோ
ரிடத்தே பிறக்க வியாம்.'
என வரும் வாழ்த்துத் தடைமொழியும்,
'விளைபொருண்மே லண்ணல் விரும்பினையே லீண்டெங்
கிளையழுகை கேட்பதற்கு முன்னம்--விளைதேன்
புடையூறு பூந்தார் புனைகழலாய் போக்கிற்
கிடையூறு தோன்றாமு னேகு.'
என வரும் துணைச்செயற்றடைமொழியும் முதலாயின கொள்க.
'பாலன் றனதுருவாய்ப் பாருலகுண் டாலிலையின்
மேலன்று நீதுயின்றாய் மெய்யென்ப--ராலன்று
வேலைசேர் நீரதோ விண்ணதோ மண்ணதோ
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்.'
இது இறந்தகாலத் தடைமொழி.
1'நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற'.
இது நிகழ்காலத் தடைமொழி.
'முல்லைக் கொடிநுடங்க மொய்காந்தள் கையெடுப்ப
மெல்ல வினவண்டு வீழ்ந்திரங்க--மெல்லியர்மேற்
றீவாய் நெடுவாடை சேர்ந்தாற் செயலறியேன்
போவா யொழிவாய் பொருட்கு.'
இது எதிர்காலத் தடைமொழி. பிறவும் அன்ன.
1. திருக்குறள், 304.