163. விதிரேக அணியின் வகை
ஒருமை யிருமை சிலேடை யுயர்பினொ டேதுவன்றிப்
பெருமை மலிசாதி யொப்பாம் விதிரேகம் பேசுதொழில்
அருமை மலிகுணஞ் சாதியென் றாகுமவ் வேதுவுமற்(று)
இருமை நிகழ்ஞா பகங்கா ரகமா மிலங்கிழையே!
(இ-ள்.) ஒருமை விதிரேகம், இருமை விதிரேகம், சிலேடை விதிரேகம், உயர்பு விதிரேகம், ஏது விதிரேகம், சாதி விதிரேகம், ஒப்பு விதிரேகம் என விதிரேகத்தைக் கூறுபடுப்பர். அது தொழில், குணம், சாதி பற்றிக் கூற்றினானும் குறிப்பினானும் வரும். ஏது விதிரேகத்தை ஞாபக ஏதுவும், காரக ஏதுவும் எனக் கூறுபடுப்பர் (எ-று.)
'அனைத்துலகுஞ் சேய்போ யருநிதியங் கைக்கொண்
டினைத்தளவே யென்றற் கரிதாய்ப்--பனிக்கடன்
மன்னவநின் சேனைபோன் மற்றது நீர்வடிவிற்
றென்னு மிதுவொன்றே வேறு'.
இது ஒன்றற்கொரு பேதஞ் சொன்னமையால், ஒருமை விதிரேகம்.
*'வேங்கைவன நாடன் விசயன்வா டைக்கதிப
னோங்கு புகழுதயா தித்தனுக்குத்-தாங்குகட
னேராமென் றாலு நிறத்தா லவன்செய்யன்
காரார் நிறமக் கடல்.'
* "ஒருமை விதிரேகமும், ஒன்றின் எதிர்நிலைப் பொருளை மற்றைய தன்பாற்படுத்து இரண்டிற்கும் இரண்டு பேதந் தருமாற்றான் ஈண்டெடுத்துக் காட்டிய இருமை விதிரேகமும் ஒருமை விதிரேகம் எனக் கொண்டு,
'ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்று--மாங்கவற்றுண்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்'.
'சென்று செவியளக்குஞ் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே
நின்றளவி லின்ப நிறைப்பவற்று--ளொன்று
மலரிவருங் கூந்தலார் மான்மதர்நோக் கொன்று
மலரிவருங் கூத்தன்றன் வாக்கு.'
என வருவனவற்றையே இருமை விதிரேகம் என்பாருமுளர்," என்பது பழைய குறிப்பு.