காணாத கண்பரப்புந் தோகை கடும்பழிக்கு
நாணா தயர்த்தார் நமர்.'
இது காரணம் விலக்கிக் காரியம் புலப்படுத்தும் விபாவனை. இன்னும்,
'காரண மின்றி மலயா நிலங்கனலு
மீர மதிவெதும்பற் கென்னிமித்தங்--காரிகையார்க்
கியாமே தளர வியல்பாக நீண்டனகண்
தாமே திரண்ட தனம்.'
எனவும்,
'பாயாத வேங்கை மலரப் படுமதமா
பூவாத புண்டரிக மென்றெண்ணி--மேவிப்
பிடிதழுவி நின்றுறங்குங் கானிற் பிழையாம்
வடிதழுவும் வேலோய் வரல்.'
எனவும் வருவனவற்றையும் விபாவனையின்பாற் படுத்துக்கொள்க.
'வெறிகொ ளினச்சுரும்பு மேய்ந்ததோர் காவிற்
குறைபடுதேன் வேட்குங் குறுகு--நிறைமதுச்சேர்ந்
துண்டாடுந் தன்முகத்தே செவ்வி யுடையதொரு
வண்டா மரைபிரிந்த வண்டு,'
இஃது அடையும் பொருளும் அயல்பட மொழிதல்.
'உண்ணிலவு நீர்மைத்தா யோவாப் பயன்சுரந்து
தண்ணளி தாங்கு மலர்முகத்துக்--கண்ணெகிழ்ந்து
நீங்க லரிய நிழலுடைத்தாய் நின்றெமக்கிங்
கோங்கிய சோலை யுளது.'
இது வள்ளலைக் கொள்ள நின்று அடை பொதுவாய்ப் பொருள் வேறுபட வந்தது.
'தண்ணளிசேர்ந் தின்சொன் மருவுந் தகைமைத்தா
யெண்ணிய வெப்பொருளு மெந்நாளு--மண்ணுலகில்
வந்து நமக்களித்து வாழு முகிலொன்று
தந்தது முன்னைத் தவம்,'
இதுவும் ஒரு வள்ளலைக் கொள்ள நின்று அடை விரவிப்பொருள் வேறுபட வந்தது.
'கடைபோ லுலகியற்கை காலத்தின் றீங்கா
லடைய வறிதாயிற் றன்றே--யடைவோர்க்
கருமை யுடைத்தன்றி யந்தேன் சுவைத்தாய்க்
கருமை விரவாக் கடல்.'