இஃது ஐயவதிசயம்.
'ஆளுங் கரியும் பரியுஞ் சொரிகுருதி
தோளுந் தலையுஞ் சுளித்தெறிந்து--நீள்குடையும்
வள்வார் முரசு மறிதிரைமேற் கொண்டொழுக
வொள்வா ளுறைகழித்தான் வேந்து.'
இது துணிவதிசயம். இதனைத் தொழிலதிசயம் என்பாரும் உளர்.
'திங்கள் சொரிநிலவு சேர்வெள்ளி வள்ளத்துப்
பைங்கிள்ளை பாலென்று வாய்மடுப்ப--வங்கயலே
காந்தர் முயக்கொழிந்தார் கைவறிதே நீட்டுவரா
லேந்திழையார் பூந்துகிலா மென்று.'
இது திரிபதிசயம். பிறவும் அன்ன.
'மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால்--விண்டொடர்ந்து
பாயுங்கொ லென்று பனிமதியுந் தன்னுருவந்
தேயுந் தெளிவிசும்பி னின்று',
இஃது இயங்கு பொருள் நோக்கு.
'வேனில் வெயிற்குடைந்த மெய்வறுமை கண்டிரங்கி
வானில் வளமருளும் வண்புயற்குத்--தானுமெதிர்
தாதுமே தக்க மதுவுந் தடஞ்சினைக்கைப்
போதுமீ தேந்தும் பொழில்.'
இஃது இயங்காப் பொருள் நோக்கு. (25)
166. ஏது என்னும் அலங்காரம்
ஏது வுரைப்பி னிதுவிது வின்விளை வென்றுரைத்தல்;
ஓதிய காரக ஞாபக முள்ளதொ டொன்றினொன்று
மாதி யபாவ மழிவுபா டென்று மபாவமின்மை
தீதி லொருங்குடன் றோற்றம்யுத் தாயுத்தஞ் செப்புவரே.
(இ-ள்.) ஏது என்னும் அலங்காரம் ஒன்றினிடத்தொன்று விளைந்ததாகச் சொல்லுவது; அது காரகவேதுவும், ஞாபகவேதுவும், உள்ளதன்அபாவமும், ஒன்றினொன்று அபாவமும், அழிவுபாட்டபாவமும், என்றுமபாவமும், இன்மையபாவமும், ஒருங்குடன்றோற்றமும், யுத்தமும், அயுத்தமும் என விகற்பிக்கப்படும் (எ-று.)