போர்வேட்ட மேன்மைப் புகழாளன் யாம்விரும்பித்
தார்வேட்ட தோள்விடலை தான்.'
இஃது புகழ்ந்தாற்போலப் பழித்த இலேசம்.
168. நிரனிறை, சுவை, ஊக்கம், பரியாயம்
என்னும் அலங்காரங்கள்
நிரனிறை யாவது சொல்லும் பொருளு நிரனிறுத்தல் ;
விரவு மகிழ்ச்சி யுளநிக ழார்வம் விளம்புமொழி ;
உரிய சுவைதா னிரதமேம் பாட்டுரை யூக்கமென்ப ;
பரியாய மோர்பொருள் தோன்றப் பிறிது பகர்தலென்னே.
(இ-ள்.) சொல்லையாவது பொருளையாவது நிரையே நிறுத்தல் நிரனிரை என்னும் அலங்காரமாம் ; உளநிகழ் ஆர்வங்கூறுமொழி மகிழ்ச்சியாம்; இரத வசனம் சுவையாம்; ஊக்கமாவது, தன்மேம்பாட்டுரையாம்; பரியாயம் தான் கருதிய பொருளைப் பிற மொழியாற் பகர்தலாம் (எ-று.)
வரலாறு:-
'காரிகை மென்மொழியா னோக்காற் கதிர்முலையால்
வார்புருவத் தாலிடையால் வையகத்தி--னேர்தொலைந்த
கொல்லி வடிநெடுவேல் கோங்கரும்பு விற்கரும்பு
வல்லி தமியேன் மனத்து.'
இஃது சொல்லை நிறுத்தி அடைவே பொருளாலே கண்ணழித்தலால், நிரனிறை என்னும் அலங்காரமாம். பொருள்களிற் சொன்ன நிரனிறை விகற்பமெல்லாம் வந்தவழிக் கண்டுரைத்துக் கொள்க.
'சொல்ல மொழிதளர்ந்து சோருந் துணைமலர்த்தோள்
புல்ல விருதோள் புடைபெயரா--மெல்ல
நினைவே மெனினெஞ் சிடம்போதா தெம்பால்
வனைதாராய் வந்ததற்கு மாறு.'
இஃது நெஞ்சுள் நிகழ்ந்த ஆர்வத்தைப் புலப்பட உரைத்தலால் மகிழ்ச்சி என்னும் அலங்காரம்.
'உண்ணிகழ் மகிழ்ச்சி புலப்பட வுரைத்த
றிண்ணிய வார்வ மொழியெனச் செப்புவர்.'
மகிழ்ச்சி எனினும் ஆர்வமொழி எனினும் ஒக்கும்.