173. ஒருங்கியல், பரிமாற்றம், ஆசி என்னும் அலங்காரங்கள்
துப்பா ரொருங்கியல் தூய வினைபண் பிரண்டுபொருட்(கு)
ஒப்பா வொருசொல்லு வைப்ப துயர்பரி மாற்றமது
செப்பார் பொருண்மா றிடல்;திக ழாசியின் சீர்மைசொலின்
தப்பாத வாசீர் வசன மெனவுணர் தாழ்குழலே!
(இ-ள்.) ஒருங்கியல் அலங்காரம், இரண்டு பொருட்குப் பொருந்த ஒரு சொற்புணர்வது; அது வினை புணர்நிலையும், பண்பு புணர்நிலையும் என இரண்டு வகைப்பட்டு மூன்றாம் வேற்றுமையான் வரும். புணர் நிலையெனினும் ஒருங்கியல் எனினுமொக்கும். பரிமாற்றமாவது, பொருள் கொடுத்துப் பொருள் கொள்வதாகக் கூறுதல்; பரிவர்த்தனை எனினும் பரிமாற்றம் எனினுமொக்கும். ஆசி என்னும் அலங்காரம் ஆசீர் வசனஞ் சொல்லுதலாம் (எ-று.)
வரலாறு:--
'பூக்கால் புனைந்த புனவர் மடமக
ணோக்காநோக் குண்டாரை நோவதெவன்--நோக்காதே
கள்ள நிறையுங் கருங்கண்ணாற் கட்டழித்தா
ளுள்ள நிறையோ டொருங்கு.'
இது வினை புணர் நிலை.
'பூங்காவிற் புள்ளொடுங்கும் புன்மாலைப் போழ்துடனே
நீங்காத வெம்மைவாய் நீண்டனவாற்--றாங்காதல்
வைக்குந் துணைவர் வருமவதி பார்த்தாவி
யுய்க்குந் தமியா ருயிர்.'
இது பண்பு புணர் நிலை.
'காமனை வென்றான் சடைமதியுங் கங்கையுந்
தாம நிழலொன்று தாங்கொடுத்து--நாமப்
பருவா ளரவின் பணமணிக டோறு
முருவா யிரம்பெற் றுள.'
* 'சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையுந் தந்து.'
இவை பரிமாற்றம்.
' மிகைசேர்ந்த நாகமும் வெண்மதியுந் தம்மிற்
பகைதீர்ந்த மால்சடையோன் காப்ப--முகைமலரக்
கோழி யனுபமனன் கோரம் புலிவாழி
வாழிய மண்டலத்து வான்.'
இது ஆசி மொழி. வாழ்த்து எனினும் அமையும்.
(33)
* திருக்குறள், 1183.