179. சித்திரக் கவி
ஏறிய மாலைமாற் றேசக் கரமினத் தாலெழுத்தாற்
கூறிய பாட்டு வினாவுத் தரமேக பாதமன்றித்
தேறிய காதை கரப்புச் சுழிகுளஞ் சித்திரப்பா
வீறியல் கோமூத் திரியும் பிறவும் விரித்துரையே.
(இ.ள்.) மாலை மாற்று முதற் கோமூத்திரியீறாகக் கூறிய அனைத்துஞ் சித்திரக்கவியாம் (எ-று.)
மாலை மாற்றாவது, மீள வாசித்தாலும் அதுவேயாவது.
சக்கரமாவது, நான்காரைச் சக்கரம் ஆறாரைச் சக்கரம் எட்டாரைச் சக்கரமுதலிய சக்கரமாக வாசிக்கலாவது.
இனத்தாலும் எழுத்தாலுங் கூறிய பாட்டாவன, வல்லினம் மெல்லினம் இடையினத்தொன்றாலே வருதல் செய்யின் ஓரினப்பாட்டாம்.
ஓரெழுத்தாலே முற்றும் வருவன ஓரெழுத்துப்பாட்டாம்.
வினாவுத்தரமாவது, வினாவினுக்குச் சொன்ன உத்தரமெல்லாமொன்றாகத் தொகுக்க ஓர் பொருள் பயப்பது.
ஏகபாதம், நாற்காலுச்சரிக்கப் பொருள் வேறாவது.
வரலாறு:--
'காணிமா பூவரே ரேவபூ மாணிகா.'
'நீவாத மாதவா தாமோக ராகமோ
தாவாத மாதவா நீ.'
இவை இறுதி முதலாக வாசித்தாலும் அவையேயாதலான் மாலை மாற்றாம்.
சக்கரக்கவி வருமாறு:--
'மாதவா போதி வரதா வருளமலா
பாதமே யோது சுரரைநீ--தீதகல
மாயா நெறியளிப்பாய் வாரன் பகலாச்சீர்த்
தாயா லலகிலரு டான்.'
இது ஆர்தோறு நான்கெழுத்து நின்று கொப்பூழில் ரகாரம் பெற்று, குறட்டின் வசுதாரை என்னும் பெயர் வந்து, சக்கரத்தில் இருபத்தெட்டெழுத்தாய் முடிந்த நான்காரைச்சக்கரம்.