பட்ட பிரகிருதியாம்; அவற்றுள் சுவ்வும் அர்ரும் ஆரும் அர்களும் ஆர்களும் கள்ளும் மாரும் என இவையெழும் முதல் வேற்றுமைக் குருபுகளாம்; இவை எட்டாம் வேற்றுமையொழித்தொழிந்த வேற்றுமை ஆறின் முன்பு நிற்கவும் பெறும் ஒரோவிடத்து (எ-று.)
'எங்கும்' என்ற உம்மையான், விளிவேற்றுமைக்கு முன்னும் சிறுபான்மை வரப்பெறும்.
(2)
31. எண்வகைப் பெயரும், எட்டு வேற்றுமையுங் கூடிக் காரக பதங்கள்
அறுபத்து நான்காம் என்பது
ஒருவ னொருத்தி பலரொன் றொடுபல வுஞ்சிறப்பின்
உருபுகண் மூன்று முடன்வைத்துப் பின்னெட்டு வேற்றுமையும்
மருவ நிறுவி யுறழ்தர வாங்கா ரகபதங்கள்
உருவு மலியு மறுபத்து நான்குள ஒண்டொடியே!
(இ-ள்.) முன் சொல்லப்பட்ட எட்டுப் பிரகிருதியை முறையானே நிறுத்தி, அவையிற்றின் பின்னாக எழுவாய் வேற்றுமை முதலாகிய எட்டு வேற்றுமையையும் அடைவே வைத்துறழ அவை அறுபத்து நான்கு காரக பதமாம்(எ-று.)
வரலாறு:- சாத்தன், கொற்றன் - ஒருவனைக் கருதின சொல்.
சாத்தி, கொற்றி - ஒருத்தியைக் கருதின சொல்.
நாட்டார், ஊரார் - பலரைக் கருதின சொல்.
யானை, மரம் - ஒன்றைக் கருதின சொல்.
யானைகள், மரங்கள் - பலவைக் கருதின சொல்.
இவை கள்ளென்னும் பிரத்தியம் அழிந்து யானைபல, மரம்பல எனவும் வரும்.
சாத்தனார், கொற்றனார் - ஒருவனைச் சிறப்பித்த சொல்.
இராமர், கண்ணர் என அர் என்னும் பிரத்தியமீறாய் வரவும் பெறும்.
சாத்தியார், கொற்றியார் - ஒருத்தியைச் சிறப்பித்த சொல்.
அம்மைகள், அவ்வைகள் எனக் கள்ளென்னும் பிரத்தியமீறாய் வரவும் பெறும்.
நரியனார், நாரையார் - ஒன்றைச் சிறப்பித்த சொல்.
இச்சொல்லெட்டும் வேற்றுமை எட்டினுங் கூடிக் காரக பதங்கள் அறுபத்து நாலாமாறு காண்க.
வரலாறு:- சாத்தன், சாத்தனை, சாத்தனால், சாத்தனுக்கு, சாத்தன்பக்கலினின்று, சாத்தனுடைய, சாத்தன்பக்கல், சாத்தனே எனவும்;
கொற்றி, கொற்றியை, கொற்றியால், கொற்றிக்கு, கொற்றிபக்கலினின்று, கொற்றியுடைய, கொற்றிபக்கல், கொற்றீ எனவும்;