என்னுந் தனிநிலை எழுத்தானது ஆய்தவெழுத்தென்னும் பெயரதாம்; பெயர்த்து இடையா முறிந்தன ய முதல் ஆறும் - முன் சொன்ன பதினெட்டு மெய்களுக்குள்ளும் ய ர ல வ ழ ள வென்னும் ஆறெழுத்தும் இடையினவெழுத்தென்னும் பெயரவாம்; ங ஞ ண ந ம ன என்று செறிந்தன மெல்லினம் - ங ஞ ண ந ம ன வென்னும் ஆறெழுத்தும் மெல்லினவெழுத்தென்னும் பெயரவாம்; செப்பாத வல்லினம் - இவற்றுட்சொல்லாதொழிந்த க ச ட த ப ற வென்னும் ஆறெழுத்தும் வல்லினவெழுத்தென்னும் பெயரவாம் (எ - று.)
'தேமொழியே!' என்பது மகடூஉ முன்னிலை.
(1)
2. குறில், நெடில், உயிரளபெடை, வர்க்கவெழுத்து, குற்றியலுகரம்
இறுதிமெய் நீங்கிய வீராறி லைந்து குறில்; நெடில் ஏழ்
பெறுவரி யான்;நெடு நீர்மை யளபு; பிணைந்தவர்க்கம்
மறுவறு வல்லொற்று மெல்லொற்று மாம்; வன்மை மேலுகரம்
உறுவது நையுந் தொடர்மொழிப் பின்னு நெடிற்பின்னுமே.
(இ - ள்.) இறுதிமெய் நீங்கிய ஈராறில் ஐந்து குறில் நெடில் ஏழ் பெறுவரியான் -1வருக்கங்கடோறும் இறுதியெழுத்து நீங்கலாக மற்றப் பன்னிரண்டு எழுத்துக்களுக்குள்ளும் ஐந்தெழுத்துக் குற்றெழுத்தென்னும் பெயரவாம்; ஏழெழுத்து நெட்டெழுத்தென்னும் பெயரவாம்; 2நெடு நீர்மை அளபு - உயிரளபெடையானது நெடுஞ்சீர்மையுடைத்து; பிணைந்த வர்க்கம் மறுஅறு வல்லொற்றும் மெல்லொற்றும்
1. அவை அ, இ, உ, எ, ஒ எனவும் ; ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனவும்; க, கி, கு, கெ, கொ எனவும்; கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ எனவும் வரும். ஒழிந்த வருக்கங்களிலும் இவ்வாறே கண்டு கொள்க.
2. உயிர் எழுத்துக்களுள் நெட்டெழுத்து ஏழும் அளபெடுக்கும். அங்ஙனம், அளபெடுக்கையில் ஐகாரத்திற்கு இகரமும், ஒளகாரத்திற்கு உகரமும், மற்றை நெட்டெழுத்துக்களுக்கு அவற்றவற்றின் குற்றெழுத்துக்களும் அறிகுறியாக அயலில் எழுதப்படும். உயிரளபெடையானது தனிநிலையளபெடை, முதனிலையளபெடை, இடைநிலையளபெடை, இறுதிநிலையளபெடை என நான்கு வகையாம் என ஒருசாராசிரியரும், முதனிலையளபெடை, இடைநிலையளபெடை, இறுதிநிலையளபெடை என மூவகையாம் என ஒருசாராசிரியருங் கூறுவர்,