இவையிற்றினுக்கு உதாரணம் வருமாறு:-
சாத்தன் கொற்றனை அஞ்சுவித்தான்.
கொற்றன் அரங்கனைப் போக்கினான்.
புத்தன் கண்ணனை உய்வித்தான்.
என்புழிக் கருத்தா கிரியைக்குக் காரணமாய் நிற்றலின், காரணக் கருத்தாவாயிற்று.
விழுமியோரால் செய்யப்படாநின்றது நன்மை.
சாத்தனால் எறியப்பட்டது கல்.
கொற்றனால் கொள்ளப்பட்டது வீடு.
என்புழிக் கருத்தா இடந்தெரிந்து நிற்றலால், தான் தெரி கருத்தாவாயிற்று.
தேவதத்தன் சோற்றை அடுகின்றான்.
என்புழித் தேவதத்தன் என்னுஞ் சொல் தானே கருத்தா என்னுமிடந்தெரிந்து நில்லாமையானும், சோற்றை என்னுங் காரக பதத்தானும், அடுகின்றான் என்னுங் கிரியா பதத்தானுங் கருத்தா என்று அறியப்படுதலானும், தான் தெரியாக் கருத்தாவாயிற்று; 'வறியோர் சுற்றம் உவப்பர்' என்பதும் அது.
நன்மை தானே வெளிப்படும் விழுமியோர் பக்கல்.
என்புழி, நன்மையைச் சாத்தன் வெளிப்படுத்தினான் என்றாற் போல நன்மை கருமமாய்க் கருத்தாப் பிறிதொன்றாய் நில்லாது கருமமுங் கருத்தாவுந் தானேயாய் நிற்றலால், கருமக் கருத்தாவாயிற்று; 'அன்பு கெடுந் தீயோர் பக்கல்' என்பதும்,
1"பகைபாவ மச்சம் பழியென நான்கும்
இகவாவா மில்லிறப்பான் கண்."
2"அறம்3பொருள் கேண்மை பெருமையிந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா;--பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென்
றச்சத்தோ டிந்நாற் பொருள்."
என்பனவும் அது.
விழுமியோர் நன்மை செய்வர்.
அறிவிலாதோர் பகை பெருகுவர்.
முயற்சியில்லாதோர் இகழ்ச்சியடைவர்.
1. திருக்குறள், 146.
2. நாலடியார், 81.
3. 'அறம்புகழ்' என்றும் பாடம்.