என்புழி, தடுக்கு இருக்கைக்குச் சேர்வானமையின், சேர்வாதாரமாயிற்று; 'தேரின்கண் நின்றான்; மெத்தையிற்கிடந்தான்' என்பனவும் அது.
எள்ளில் எண்ணெய் நின்றது.
என்புழி, ஆதாரமான எள்ளின்கண் ஆதேயமான எண்ணெய் எங்குங் கலந்து நிற்றலால், கலப்பாதாரமாயிற்று; 'தயிரில் வெண்ணெய் உளது; மரத்தில் தீயுண்டு' என்பனவும் அது. புலன் ஆதாரம் என்பது வடமொழியில் விடயாதாரம் ஆம். அது,
காட்டின்கண் புலி நின்றது; கடலின்கண் மீன் திரிகின்றது.
என வரும். அயலாதாரமாவது,
ஆலின்கண் பசுக் கிடந்தது.
யாழின்கண் ஓசை நின்றது.
என வரும். இப்பதங்களில் சாரியைச் சொற்களும், வேற்றுமை உருபுகளும் வந்து கிரியா பதத்தோடுங் கூடி முடிந்தவாறு கண்டுகொள்க. இனி முன் சொல்லப்பட்ட இருபத்து மூன்று காரக பதத்தினும் வேற்றுமைப் பிரத்தியங்கள் மயங்கி வருமாறு சொல்கின்றார்.
(3, 4)
42. இருபத்துமூன்று காரக பதத்தினும் வேற்றுமைப் பிரத்தியங்கள் மயங்கி வருதல்
ஆதிய தான்தெரி யாக்கருத் தா;அதல் லாக்கருத்தா
ஆதிய தாறொடு மூன்றும் பெறுமென்பர்; ஆதியையே
ஓதினர் தான்தெரி யாக்கரு மத்திற்(கு); ஒழிகருமம்
மேதகு மூன்றிரண் டாறுநான் காமென்பர் மெல்லியலே !
(இ-ள்.) தான் தெரியாக் கருத்தாவிற்கு எழுவாய் வேற்றுமையேயாம்; அல்லாத கருத்தாவிற்கு எழுவாய் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையுமாம்; தான் தெரியாக் கருமத்திற்கு எழுவாய் வேற்றுமை ஒன்றுமேயாம்; ஒழிந்த கருமத்திற்கு மூன்றாம் வேற்றுமையும் இரண்டாம் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் நான்காம் வேற்றுமையுமாம் (எ-று.)
(5)
43. இதுவும் அது.
மூன்றைந்தொ டாறு கரணம் பெறும்;முரட் கோளியதே
மூன்றிரு மூன்றொடு நான்காந் தருமுறை யால்;அவதி
தோன்றுமைந் தாம்;மற்றை யாதார மேழின்க ணேயென்பவாம்;
வான்றிக டெய்வ வடநூற் புலவர்தம் வாய்மொழியே.