49. அவ்வியபாவ சமாசமும், துவந்துவ சமாசமும்
முன்மொழி யவ்வியஞ் சேர்தொகை பேர்முன் மொழித்தொகையே
சொன்மொழி யவ்விய பாவம் மருவும்; துவந்துவமும்
வன்மொழி யாமித ரேதரம் வாய்ந்த சமாகாரமாம்;
நன்மொழி யானுரைத் தார்கள் சமாசம் நறுநுதலே !
(இ-ள்.) முன்மொழி 1அவ்வியத் தொகையும், பெயர் முன் மொழித் தொகையும் என்று அவ்விய பாவம் இரண்டு வகைப்படும்; இதரேதரத் தொகையும், சமாகாரத் தொகையும் என்று துவந்துவம் இரண்டு வகைப்படும் (எ-று.)
சமாசம் என்பது வடமொழியின் முப்பத்திரண்டாம் வியஞ்சனத்தோடு கூடி நிற்கும் சொல் எனக் கொள்க.
வரலாறு:-
கும்பத்தருகு நிகழ்கின்றது உப கும்பமாம். இதன்கண் உப என்னும் அவ்வியம் முன்பு நின்று கும்பம் என்னும் பெயர் பின்பு நிற்றலான், முன்மொழி அவ்வியத் தொகையாயிற்று.
சாகத்தினுடைய பிரதி 2 சாகப் பிரதியாம். பிரதி என்னுஞ் சொல் அவ்வியம்; சாகம் என்பது பெயர். அவ்வியம் பின்பு நின்று பெயர் முன்பு நிற்றலால் பெயர் முன்மொழித் தொகையாயிற்று.
வடமொழியில் அவ்வியச் சொல் தமிழின் இடைச்சொல்லென அமைக்க.
இடைச்சொல்லாவன, காரக பத வேற்றுமையானும் கிரியா பத வேற்றுமையானும் விகற்பிக்கப்படாதே ஐ ஆல் என்றும், மன் இசின் என்றும்; மற்று ஆங்கு ஒருங்கு என்றும் இவை முதலாக வருவன.
'துவந்துவமும் வன்மொழியாம் இதரேதரம் வாய்ந்த சமாகாரமாம்' என்பது, 'கபில பரணர் தங்களிலே வாது செய்தார்கள்,' என இயைபு தோற்றி நின்றமையால், இதரேதரத் தொகையாயிற்று.
உவாவும் பதினான்கும் உலாப் பதினான்கு. நெய்யும் எண்ணெயும் நெய்யெண்ணெய். நாளும் பக்கமும் நாட்பக்கம் -- என்று இப்படி வருவனவெல்லாம் சமாகாரத் தொகையாம்.
இவையெல்லாம் வட மொழியிற் கண்டு கொள்க.
(6)
1 'அவ்வியயம் என்னும் வடமொழிச் சிதைவு'
2 'சாப்பிரதி எனவும் வழங்கும்.' இவை பழைய குறிப்பு.