58

51. தமிழ்த் தொகைநிலைத் தொடர்களில் உண்டாம் சில சிதைவுகள்

அன்மொழி நற்றொகை யிற்றொகும் போதுமல் லாவிடத்தும்
நன்மொழிப் பின்பு நடுவுங் கெடுநன் கொரோவிடத்து
முன்மொழி யீறு கெடும்;பன்மை யாகும்; முரட்பொருள்கோள்
பின்மொழி முற்சொற் பிறிதோர் மொழியொ டிருமொழியே.

(இ-ள்.) அன்மொழித் தொகையின்கண்ணும், அல்லாத தொகைகளிலும், பின்மொழிகளும் நடுவின் மொழிகளுஞ் சிதைகையும் உண்டு; ஒரோவிடத்துத் தொகையின் முன்பு நின்ற சொல்லின் ஈற்றில் ஒற்றுச் சிதைகையும் உண்டு; அச்சொல் பன்மைப்பொருளை விளக்கி நிற்றலும் உண்டு; இனிப் பொருள் கொள்ளும் இடத்துப் பின்மொழியில் ஆதல், முன்மொழியில் ஆதல், வேற்று மொழியில் ஆதல், இரு மொழியிலும் ஆதல் பொருள் சிறக்கும் (எ-று.)

வரலாறு:-

கடு - காய் 'கடு' எனவும், இவ்வண்ணம், 'தான்றி, நெல்லி' எனவும் வருவன பின்மொழிச் சிதைவு; தாமரை, பருத்தி, எள்ளு, கொள்ளு என வருவனவும் அது. பின்மொழி அழிந்த பொழுதும் அழியாத போதைப் பொருள் பயக்கும்.

கவிழப் பூக்குந் தும்பை, கவிழ் தும்பை. வெளுக்கப் பூக்குந் தாமரை, வெண்டாமரை. சிவக்கப் பூக்குந் தாமரை, செந்தாமரை. கொம்மட்டி போலக் காய்க்குமாதளை, கொம்மட்டி மாதளை. வேரிற் பழுக்கும் பலா, வேர்ப் பலா என்பன இடைமொழிச் சிதைவு.

சிவக்கத் தோய்ந்த விளிம்பினையுடைய கூறை செவ்விளிம்பன், என்பது இடைச்சொல்லும் கடைச்சொல்லும் அழிந்து தொக்கது. சோழன் கோன், சோழ கோன் என்பது முன் மொழியீற்றுச் சிதைவு; 'பட்டர்கள் தெருவு', 'நாட்டார் வாய்க்கால்', 'ஆயிரத்தளியர் வாசல்' என்பனவற்றில் முன்மொழியீறு பன்மைப் பொருளை விளக்கி நின்றது.

மாங்காய், பலாப்பழம் என்பன பின்மொழிச் சிறப்புத் தொகை. மழைக்கொடை மருத்தெண்ணெய் என்பனவும் அது. அரைப்பலம், எள்ளூர், புறங்கை என்பன முன்மொழிச் சிறப்புத் தொகை.

'கற்றலை, கழுத்தாடை' என்பன அன்மொழிப் பொருட்சிறப்புத் தொகை.

சோழ பாண்டியர் என்பது இரு மொழிப் பொருட்சிறப்புத் தொகை.