5. மாத்திரையும், பின்வரும் உயிர் ஒற்றுடன் கூடும் என்பதும்
குற்றெழுத் தொன்(று); ஒன் றரையாகு மையௌ. 'இரண்டுநெடில்;
ஒற்றெழுத் தாய்தம்இ உஅரை; மூன்றள(பு); ஓங்குயிர்மெய்
மற்றெழுத் தன்றுயிர் மாத்திரை யேபெறும்; மன்னுகின்ற
ஒற்றெழுத் தின்பின் னுயிர்வரின் ஏறும் ஒளியிழையே!
(இ - ள்.) குற்றெழுத்து ஒன்று - குற்றெழுத்தொரு மாத்திரை பெறும்; ஒன்றரையாகும் ஐ ஒள - ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஒன்றரை மாத்திரை பெறும்; இரண்டு நெடில் - நெட்டெழுத்து இரண்டு மாத்திரை பெறும்; ஒற்றெழுத்து ஆய்தம் இ உ அரை - ஒற்றெழுத்தும் ஆய்தவெழுத்தும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆகிய நான்கும் ஒவ்வொன்று அரை மாத்திரை பெறும்; மூன்று அளபு - உயிரளபெடையானது மூன்று மாத்திரை பெறும்; ஓங்கு உயிர்மெய் மற்றுஎழுத்து அன்று உயிர்மாத்திரையே பெறும் - உயிர்மெய்யெழுத்தானது வேறேயெழுத்தன்று, உயிர் மாத்திரையே பெறும்; ஏறிய உயிரினளவே உயிர்மெய்க்கும் அளவெனக் கொள்க; மன்னுகின்ற ஒற்றெழுத்தின் பின் உயிர்வரின் ஏறும் - நிலைமொழியினது ஈற்றொற்றின் பின்னர் வருமொழி உயிர் முதலாகிய மொழி வந்து புணர்ந்தால் வந்த உயிரானது ஒற்றின் மேலேறி நடக்கும் (எ - று.)
'ஒளியிழையே!' என்பது மகடூஉ முன்னிலை.
(5)
6. எழுத்துக்கள் பிறத்தற்குக் காரணமாகிய இடமும் முயற்சியும்
உந்தி முதலெழுங் காற்றுப் பிறந்துர முஞ்சிரமும்
பந்த மலிகண் டமுமூக்கும் உற்றண்ணம் பல்லுடனே
முந்து மிதழ்நா மொழியுறுப் பாகு முயற்சியினால்
வந்து நிகழு மெழுத்தென்று சொல்லுவர் வாணுதலே!
(இ - ள்.) நாபிக் கமலத்தினின்று எழாநின்ற வாயுவானது மார்பின் இடமாகவும் சிரத்தின் இடமாகவும் கண்டத்தின் இடமாகவும் மூக்கின் இடமாகவும் பொருந்தி வெளியே புறப்படும்போது அண்ணம், பல், இதழ், நாவென்று சொல்லப்படாநின்ற அவயவங்களின் முயற்சியினால் வெவ்வேறெழுத்தொலியாய்ப் பிறக்குமென்று சொல்லுவர் மேலாகிய புலவர்
(எ - று.)
'வாணுதலே!' என்பது மகடூஉ முன்னிலை.
(6)