முன்பு சொல்லிப் போந்த காரிதக் காரிதத் தாதுவின்மேல் பின் சொன்ன வி, பி என்னும் பிரத்தியங்கள் சேர்ந்து காரிதக் காரிதக் காரிதமாம்.
உதாரணம் :-
ஆட்டுவிப்பி, ஊட்டுவிப்பி என வரும். கருத்தாக் கருமங்களும் அவ்வாறே கொள்க.
(6)
66. காலங்காட்டும் பிரத்தியங்கள்
தாதுவின் பின்பு தனய விறப்பின்; நிகட்சியின்கண்
ஓதுங் கிறசுவ்வொ டாநின்ற வாம்;கும்மும் மோடுமஃகான்
பேத மலியு மெதிரின்க ணாகும்; பிறவும்வந்தால்
ஏதமில் சந்திராந் தம்பிழை யாம லியற்றிக்கொள்ளே.
(இ-ள்.) தாதுக்களின் பின் த, ன, ய என்னு மூன்று பிரத்தியமும் இறந்த காலத்தைக் குறித்து வரும்; நிகழ் காலத்தின்கண், கிற, சு, ஆநின்ற என்னும் மூன்று பிரத்தியமுமாம்; கும், உம் என்பனவும் மகாரவொற்றும் எதிர் காலத்தின்கண்ணாம்; பிற பிரத்தியங்களாலும் வரும்; அவை *சந்திராந்தம் என்று பெயராம்; இவை பிழையாமல் முடிக்க (எ-று.)
சந்திராந்தம் வேறு சில பதங்களுக்கு உறுப்பாய் நிற்பதல்லது தனித்து வரப்பெறாது.
வரலாறு :-
பிறந்த பிள்ளை, கண்ட எருது, நின்ற பசு எனத் தகாரமும்; ஊட்டின, தீற்றின, போன என னகாரமும்; சொல்லிய, ஆய என யகாரமும் இறந்த காலத்திலும்;
செய்கிற சாத்தன், செய் சாத்தன், செய்யாநின்ற சாத்தன் என முறையே கிற, சு, ஆநின்ற என்பன நிகழ் காலத்திலும்;
நிற்குஞ் சாத்தன், அறியும் சாத்தன், சாங்கிழவி எனக் கும், உம், மகாரங்கள் எதிர் காலத்திலும் வந்தன.
இவை எல்லாம் மூன்று காலத்தில் ஒரு காலத்தைக் குறித்தல்லது வாராவென்று கொள்க. 'பேத மலியும்' என்பதனால்,
1 "சம் திரம் முதலிய அந்தப் பிரத்தியத் தொகுதியைச் சந்திராந்த மென்றார். இப்பதம் வடநூல் வியாகரணங்களிலிலது. சங்கிராந்தம் சந்திராந்தமென மரீஇயதென்பர் சிலர். சங்கிராந்தப் பதத்தின் பொருளுக்கும் மரூஉமொழி வழக்குக்கும் அது பொருந்தாது," என்பது பழைய குறிப்பு.