9. இயல்பு புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்
நின்றசொல் லீறும் வருஞ்சொன் முதலும் நிரவித்தம்முள்
ஒன்றிடும் போதும் ஒரோமொழிக் கண்ணு முலகிற்கொப்பி
னன்றிய மும்மை விகாரம்வந் தெய்திடும; நன்கியல்பிற்
குன்றுத லின்றி வருதலு முண்டென்று கூறுவரே.
(இ - ள்.) நின்ற சொல்லீறும் வருஞ்சொன்முதலும் நிரவித் தம்முள் ஒன்றிடும் போதும் ஒரோ மொழிக்கண்ணும் உலகிற்கொப்பினன்றிய மும்மை விகாரம் வந்தெய்திடும் - நிலைமொழியினது ஈறும் வருமொழியினது முதலும் ஒன்றோடொன்று கலந்து புணருமிடத்தும் ஒரோவிடத்துத் தனிமொழிக்கண்ணும் உலகத்துக்கு ஒப்பாகத் தோன்றல் திரிதல் கெடுதல் என்னு மூன்று விகாரம் வரப்பெறும்; நன்கியல்பிற் குன்றுதலின்றி வருதலும் உண்டென்று கூறுவர் - ஒரோவிடத்து விகாரப்பாடில்லாமல் நிலைமொழியினதீறும் வருமொழியினது முதலும் திரியாமல் இயல்பாய் முடிதலும் உண்டென்று சொல்லுவர் மேலாகிய புலவர் (எ - று.)
(9)
10. வடமொழிக்கண் வரும் விகாரப் புணர்ச்சி
ஆன்றா முலோபத்தொ டாகம மாதேச மாரியத்துள்
மூன்றா மொழியொ டெழுத்து விகாரம் முதனடுவீ
றேன்றாம் வகையொன்ப தாகலு முண்(டு); அவை யெவ்விடத்துந்
தோன்றா வுலகத் தவர்க்கொத்த போதன்றித் தூமொழியே!
(இ - ள்.) ஆன்றாம் உலோபத்தொடு ஆகமம் ஆதேசம் ஆரியத்துள் மூன்றாம் மொழியொடு எழுத்து விகாரம் - வடமொழிக்கண் ஒரு சொல்லினிடமாகவும் ஓரெழுத்தினிடமாகவும் 1உலோபம் என்றும் ஆகமம் என்றும் ஆதேசம் என்றும் மூன்று விகாரம் வரப்பெறும்; முதல் நடு ஈறு ஏன்றாம் வகையொன்பது ஆகலும் உண்டு - பின்னும் விகாரங்களானவை மொழியினது முதலிலேயும் மொழியின திடையிலேயும் மொழியினது கடையிலேயும் என மும்மூன்றாக விகற்பிக்க ஒன்பது விகாரமாம்; எழுத்தினு மொழியினுமாகப் பதினெட்டாம். அவை யெவ்விடத்தும் தோன்றா வுலகத்தவர்க்கொத்த போதன்றி- பின்னும் விகாரங்களானவை உலகத்தார்க்கொத்த போதன்றி மற்றெவ்விடத்தும் வரப்பெறா எனக்கொள்க
(எ - று.)
'தூமொழியே!' என்பது மகடூஉ முன்னிலை.
(10)
1. உலோபம் - கெடுதல், ஆகமம் - தோன்றல், ஆதேசம் - திரிதல்.