78. முன்னிலை தன்மை எதிர்கால வினைகளில்
பிரத்தியங்கள் வருமாறு
வாய்பாய்வீர் பீர்வீர்கள் பீர்க ளிவைமன்னு முன்னிலையில்
சாய்பாய் விடுமெதிர் காலம்; இதனுழித் தன்மைசொல்லின்
வேய்பா வியதோளி! வேன்பேன்வேம் பேமொடு வோம்போமுமாம்;
சேய்பா வியசெழும் போதிப் பிரான்தன் திருந்துரைக்கே.
(இ-ள்.) வாய், பாய், வீர், பீர், வீர்கள், பீர்கள் ஆறும் எதிர்கால முன்னிலைக் கிரியா பதம் மூன்றிற்கும் ஒன்றிற்கு இரண்டாக வரும்; வேன், பேன், வேம், பேம், வோம், போம் ஆறும் எதிர்காலத் தன்மைக் கிரியா பதம் மூன்றிற்கும் ஒன்றிற்கு இரண்டாக வரும் (எ-று.)
வரலாறு:- உறங்குவாய், உறங்குவீர், உறங்குவீர்கள், உண்பாய், உண்பீர், உண்பீர்கள் எனவும்; உறங்குவேன், உறங்குவேம், உறங்குவோம், உண்பேன், உண்பேம், உண்போம் எனவும் வரும். வேன், வென் எனவும், பேன், பென் எனவும் ஆதேசமாதலும் உண்டு. பிற விகாரங்களும் அறிந்து முடிக்க.
(8)
79. ஏவல் வினையில் பிரத்தியங்கள் வருமாறு
ஓங்காத முன்னிலைப் பாலேவ லாங்கா லொருமையிற்சுப்
பாங்கார் சிறப்பிலா மேயுமின் கப்பன்மை யாமிடத்து
நீங்காத மின்களுங் கள்ளாம்; இசைவினிற் கவ்வென்பதாம்;
தாங்காப் பரோக்கத் தினிற்போலு மாமென்பர் தாழ்குழலே!
(இ-ள்.) முன்னிலை ஏவலொருமைப் பொருளின் தாதுக்கள் சு என்னும் பிரத்தியத்தான் முடியும்; முன்னிலையேவற் சிறப்பின்கண் ஆமே, உம், மின், க என்னும் நாலு பிரத்தியமுமாம்; முன்னிலை ஏவற் பன்மையின்கண் மின்கள், உம், கள் என்னும் மூன்றுமாம். இசையென்னும் பொருளிற் கவ்வரும்; பரோக்கப் பொருளின் முன்பு மூன்று காலத்திலும் முடிக்குமாறு முடிக்க. அப்பதத்தின் பின் போலும், ஆம் என்னும் இரண்டு பிரத்தியமும் வரும் (எ-று.)
வரலாறு:-
உண், உறங்கு, கிட, நட, படு, அடு, நில், இரு என முன்னிலை ஏவலொருமை வந்தது.
நாம் போகாமே, நாம் நில்லும், நாம் போமின், நாம் நிற்க என நாம் என்னும் முன்னிலையொருமைச் சிறப்புப் பதத்தானும்; நீர் போமின்,