அவன் அறியும், அவள் அறியும் எனப் படர்க்கையொருமையில் உம் வந்தது. அவர் அறிவர், அவர் நிற்பர், அவர்கள் அறிவர்கள், அவர்கள் நிற்பவர்கள் எனப் படர்க்கைப்பன்மை வந்தது.
நீ அறிசி, நீ அறிவை, நீ அறிதி என முன்னிலையொருமை வந்தது.
இச்சூத்திரத்திற் சிறப்பித்த சொல்லையும் பன்மையில் அடக்கினான். மற்றையவும் இடமறிந்து அடக்கி முடித்துக்கொள்க.
(10)
81. வினைக் குறிப்புப் பொருளினும் கருமக் காரகத்தினும்
கிரியாபதம் முடியும் விதம்
வினைக்குறிப் போடு கருமம் படர்க்கையின் மிக்கவொன்றை
அனைத்தென்ன லாம்;அவ் வொடுபடுத் தாதுபின் னாமியற்கை
தனைக்கரு மம்பெறும்; தாதுக்கள் மற்றும் படுவினைப்போல்
நினைக்க வரும்;மற் றிவையும் பெயர்ச்சொல் நிகர்த்திடுமே.
கருத்தாக் காரகத்தின் முடியுங் கிரியாபதஞ் சொல்லி, வினைக்குறிப்புப் பொருளினும், கருமக் காரகத்தினும் வருங் கிரியா பதம் முடிப்பான் எடுத்துக்கொண்டான்; அஃதாமாறு சொல்கின்றான்.
(இ-ள்.) வினைக்குறிப்பினும், கருமக் காரகத்தினுந் தாதுக்கள் முடியுமிடத்துப் படர்க்கையொன்றினைக் கருதின கிரியா பதம்போல முடியும்; கருமக் காரகத்தின்கண் வருங் கிரியாபதம் முடியுமிடத்து முன்பு சில தாதுக்களின் பின்னாகப் படு என்னுந் தாது வந்து இடையே அகாரம் ஆகமமாய்க் கருத்தாவில் முடித்த முடிப்பெல்லாம் பெறும்; மற்றத் தாதுக்கள் படு என்னுந் தாதுவைப்போல அகரத்தை முன் பெற்று, ஒரு தாதுவின் பின்னாய் வந்து கருமக்காரகத்தில் முடிதலுமுண்டு. இச்சொன்ன கிரியாபதம் எல்லாம் பெயர்ச்சொற் போலக் காரகபத வேற்றுமையான் முடிகையுண்டு (எ-று.)
வரலாறு:- உண், உறங்கு என்னுந் தாதுவின் பின் படர்க்கை ஒன்றினைக் கருதின கிரியாபதம் போல உண்டது, உறங்கியது, உண்கிறது, உறங்குகின்றது, உண்ணாநின்றது, உறங்காநின்றது, உண்பது, உறங்குவது என இப்படி மூன்று காலத்தினும் முடியும். இவ்விடத்துப் பிரத்தியங்களின் முன்னின்ற அகரம் இகரமாகையும் உண்டு.
'வினைக் குறிப்போடு கருமம் படர்க்கையின் மிக்கவொன்றை அனைத்தென்னலாம்' என்றதனால், வினைக்குறிப்பு முடியுமிடத்து உண்டது. உண்ணப்பட்டது, என்றது, உறங்கியது, உறங்கப்பட்டது என வரும். இவ்வாறே அனைத்துங் கொள்க.