11. வடமொழியில் எதிர்மறைப் பொருளில் வரும் நகாரமும், ஏ, ஓ என்பவற்றின் திரிபும்
சொன்ன மொழிப்பொரு ணீக்கு நகாரம்; அச் சொன்முன்மெய்யேல்
அந்நிலை யாக வுடல்கெடும்; ஆவிமுன் னாகிலது
தன்னிலை மாற்றிடும்; ஏஓ இரண்டும் தனிமொழிமுன்
மன்னிய ஐஒளவு மாகும் வடமொழி வாசகத்தே.
(இ - ள்.) சொன்ன மொழிப் பொருள் நீக்கும் நகாரம் - வடமொழிக்கண் ஒரு சொல்லிற்குரித்தாகிய பொருளை நீக்குதற் பொருட்டாக அச்சொல்லின் முன்னர் ஒரு நகாரம் வரப்பெறும்; 1அச்சொல் முன் மெய்யேல் அந்நிலையாக உடல் கெடும் - பின்னுமந்தச் சொல்லானது மெய்ம்முதன்மொழியாகில் அச்சொல்லின் முன் நகாரத்தின் மேனின்ற உயிர் நிற்க உடல்கெடும்; 2ஆவி முன்னாகில் அது தன் நிலை மாற்றிடும் - பின்னுமந்தச் சொன்ன சொல்லானது உயிர் முதன் மொழியாகில் அச்சொல்லின் முன் நின்ற நகாரத்தின் மேனின்ற உயிர் பிரிந்து தன்னிலையை மாற்றி உயிர் முன்னும் ஒற்றுப் பின்னுமாக நிற்கும்; ஏஓ இரண்டும் தனிமொழி முன் மன்னிய ஐஒளவும் ஆகும் வடமொழி வாசகத்தே - மொழி முதற்கணின்ற ஏகார ஓகாரங்களிரண்டும் தமிழில் வரும்போது ஐகார ஒளகாரங்களாகவும் வரும் (எ - று.)
(11)
12. வடமொழிச் சந்தி
ஆவும் அகரக் கிகரத்துக் கையும்ஒள வும்உகரக்
கேவும் இருவினுக் காரும் விருத்தி; எழிலுகரக்
கோவும் இகரத்திற் கேயுங் குணமென் றுரைப்ப;வந்து
தாவும் இவைதத்தி தத்தினுந் தாதுப் பெயரினுமே.
1. ந + நாதன் = அநாதன்
இதில் எதிர்மறைப் பொருள் தர வந்த நகரத்தின் மெய் கெட்டு அகர உயிர் நின்றது.
2. ந + உசிதன் = அநுசிதன்
இதில் எதிர்மறைப் பொருள் தரவந்த நகரத்தினின்று அகர உயிர் பிரிந்து முன்னிற்க, நகரமெய் அதன் பின் நின்றது. வந்த உயிர் அம்மெய்யுடன் கூடிற்று.