"நெஞ்சுக் குரைத்தல் கேட்டோர்க் குரைத்தல்
அந்தர மருங்கின வறிதரக் கூறலென
வந்த வகையின மூவகைக் கூற்றே."
"தலைமகன் தலைவி தோழி தாயே
கலைமருங் காப்பிற் செவிலி பாங்கன்
சீறியாட் பாணன் கண்டோர் கட்டு
வேலன் விறலி நலத்தகை யூரே
சேரி யயலோ டின்னன பிறவும்
ஆகு மென்ப வறிந்திசி னோரே."
என்றமையால் இப்பாட்டு இன்னார் கூற்றென்பது.
கேள்வி என்பது,
"உயர்திணை மருங்கி னிவர்நனி கேட்டோர்
அஃறிணை மருங்கி னிதுநனி கேட்டதெனச்
சொல்லுதல் கேள்வி யென்மனார் புலவர்."
மொழிவகை என்பது, இப்பாட்டுச் செஞ்சொல், திரிசொல், வடசொல், திசைச் சொற்களில் இன்ன சொற்பற்றி வந்தது என்பது.
பொருள் கோளாவது,
"கொழுங்கொடி வள்ளி செழுங்குலை வாழை
தீங்கரும் பேமலர் திகழ்தரு பலவே
தேங்கம ழசோகு செருவிற் பூட்டே
பூம்புன லாறெனப் பொருள்கோ ளேழே."
"அவற்றுள்,
கொழுங்கொடி வள்ளி கூறுமுற் பொருளே;
செழுங்குலை வாழையின் சொற்பொரு ளீறே;
இன்தீங் கரும்பி லிடையது பொருளே;
வன்றாட் பலவுக்கு முதலிடை பொருளே;
நற்பூ வசோகுக்கு நடுவது பொருளே;
விற்பூட்டு மேலுங் கீழும் பொருளே;
இரும்புன லாற்றினுக் கெங்கும் பொருளே."
என்றபடி இன்ன பொருள்கோள் என்றறிவது.
உட்பெறு பொருளாவது,
"உட்பெறு பொருளைச் செப்புங் காலைப்
பெற்றசொற் பொருளைச் செப்புதன் வழியே
மற்றொரு சொற்பொருள் வந்துநிற் பதுவே."