109

நிரை கவர்தலும், பூசல் மாற்றுதலும், வழியிடை ஊறுபடாமைச் செலுத்தலும், கொண்ட நிரையின் செலவு காண்டலும், தம்மூர் மன்றத்துள் நிறுத்தலும், அவையிற்றைக் கூறிடுதலும், உண்டாடுதலும், உபகரித்தலும் எனப் பதினான்காம் (எ-று.)

(14)

100. கரந்தையின் வகை

ஓடாப் படையாண்மை யுன்ன நிரைமீட்டல் மன்னர்வெற்றி
கோடாத் திறங்கூறல் தன்திறங் கூறுதல் கொற்றப்பொற்றார்
சூடாப் பொலிகுத லாரம ரோட்டல் துகளறுகல்
தேடாப் பொறித்தல் கரந்தைத் திறமற்றுந் தேர்ந்தறியே.

(இ-ள்.) இவை ஓடாப்படையாண்மை முதலிய கரந்தை விகற்பமாம். (எ-று.)

ஓடாப் படையாண்மையாவது, வருதார் தாங்குதல்; அஃதாமாறு:

"மானாக முன்னுயர்த்தான் சேனை களமுழுதுந்
தானா வருமதனைத் தாங்கினான்--மேனாள்
அருகணையா வண்ண மடற்போரின் வென்று
வருகணையாற் பெற்ற மகன்."

உன்ன நிலையாவது, வென்றி வினைமுன் வினைமுடித்தவன் திறங் கூறி உன்ன மரத்தை நற்போரினினாடல் உன்னக் குறிசெய்கெனக் கிளத்தல்.

நிரை மீட்டலாவது, கொண்ட நிரை மீட்டல்.

மன்னர் கோடாத்திறங் கூறலாவது,

"உறையு மிடமன்றே பாரெலா முன்பால்
நெறியு நிலாமுத்த மன்றே--சிறுவாய்க்கால்
அற்றன்றே முந்நீ ரகன்றுயர்ந்த மாமேரு
புற்றன்றே நீமுனிந்த போது."

தன் திறங் கூறலாவது

"ஒன்றோவென் னொண்கரத்துப் பட்டானங் குய்யுமேல்
ஒன்றோ வெரிபாய்ந் துலக்கின்றா -- ளன்றேயும்
இத்தனையி னொன்றன் றியானிற்க யாரெனின்
மற்றுன்னைப் பற்றிடுவார் வந்து."