124

108. ஈரசை மூவசைச் சீர்களின் உதாரணம்

கருவிளங் கூவிளந் தேமா புளிமா எனக்கலந்து
மருவிய நான்கு முதற்சீர்க ளாம்;மற் றவற்றினந்தத்
துருவமாங் காய்வரி னாமிடைச் சீர்ஒண் கனிவருமேற்
செருவமர் வேற்கண்ணி னாய்!கடைச் சீரெனத் தேர்ந்தறியே.

(இ-ள்.) கருவிளம், கூவிளம், தேமா, புளிமா என்னும் நான்கும் முதற்சீர்க்கு உதாரணமாம்; இவற்றின் கடைக்கண் காய் என்னுஞ் சொற்பெற்றுக் கருவிளங்காய், கூவிளங்காய், தேமாங்காய், புளிமாங்காய் என வருவன இடைச்சீர்க்கு உதாரணமாம்; அவற்றின் இறுதிக்கண் கனி என்னுஞ் சொற்பெற்றுக் கருவிளங்கனி, கூவிளங்கனி, தேமாங்கனி, புளிமாங்கனி என வருவன கடைச்சீர்க்கு உதாரணமாம் (எ-று.)

(2)

109. மேற்கூறிய சீர்களாலான அடிகளின் பெயர்

இருசீரு முச்சீரு நாற்சீரு மைஞ்சீரு மைந்தின்மிக்கு
வருசீரு மந்தரங் கால்தீப் புனலொடு மண்பெயரால்
திரிசீ ரடியாங் குறள்சிந் தளவு நெடிற்றகைமை
தெரிசீர்க் கழிநெடி லென்று நிரனிறை செப்புவரே.

(இ-ள்.) இரு சீரால் வந்த அடியும், முச்சீரால் வந்த அடியும், நாற்சீரால் வந்த அடியும், ஐஞ்சீரான் வந்த அடியும், ஐஞ்சீரின் மிக்கு வந்த அடியும் என அடி ஐந்து வகையாம்; அவற்றினுக்கு அடைவே ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் என்னும் பூதங்களின் பேரே பெயராம்; குறள், சிந்து, அளவு, நெடில், கழிநெடில் என்று நிரனிறை சொல்லுவாருமுளர் (எ-று.)

இரு சீரான் வந்த அடி குறளடி; முச்சீரான் வந்த அடி சிந்தடி; நாற்சீரான் வந்த அடி அளவடி; ஐஞ்சீரான் வந்த அடி நெடிலடி; அறுசீரான் வந்த அடி கழிநெடிலடி என்க. இவ்விடத்தில் அளவடி எனினும் நேரடி எனினும் ஒக்கும்.

வரலாறு:-

'பொருந்து போதியில்
இருந்த மாதவர்
திருந்து சேவடி
மருந்து மாகுமே."

இஃது இருசீர்க் குறளடி நான்காய் வந்த செய்யுள்.