128

களில் ஒன்றையே சிறப்புடைத்தாக்குதற்கு முதல் எழுத்துக்கள் மோனையுள்ள எழுத்தே முதலாகவுடைய சொற்களால் இயற்றுக என்பதன்பொருட்டுச் சொன்னான் என்பது. இவற்றுள் ஒற்றெழுத்து மோனையும், உயிரெழுத்து மோனையும் மரபு பிழையாமல் வரவேண்டும் என்பது. அஃதாமாறு:-

தவ்வும், தாவும், தையும், தௌவும், சவ்வும், சாவும், சையும், சௌவும் என்னும் எட்டும் மயங்கும்.

நவ்வும், நாவும், நையும், நௌவும், ஞவ்வும், ஞாவும், ஞையும், ஞௌவும் மயங்கும்.

மவ்வும், மாவும், மையும், மௌவும், வவ்வும், வாவும், வையும், வௌவும் தம்முள் மயங்கும். பிறவுமன்ன.

ஒற்றெழுத்து மோனையில்லாதன வருமாறு:-

கவ்வும், காவும், கையும், கௌவும், தம்முள் மயங்கும்.

கிய்யும், கீயும், கெய்யும், கேயுந் தம்முள் மயங்கும்.

குவ்வும், கூவும், கொவ்வும், கோவுந் தம்முள் மயங்கும்.
பிறவும் அன்ன.

வரலாறு:-

"கோமத னுக்கொல்க விற்கொண்ட வீரன் குடந்தையன்னீர்
போமத னுக்கென் புகுந்ததென் றேற்குப் புருவமென்னுங்
காமத னுக்குனித் தெய்யக் கருங்கண் சிவந்ததல்லால்
தாமத னுக்கெதி ரோர்மறு மாற்றமுந் தந்திலரே."

இதனுள் கோவென்னும் எழுத்து முதலாகிய அடியுள் 'கொண்ட' என்னுஞ் சொல்லும், 'குடந்தை' என்னுஞ் சொல்லும்; போவென்னும் எழுத்து முதலாகிய அடியுள் 'புகுந்த' என்னுஞ் சொல்லும், 'புருவம்' என்னுஞ் சொல்லும்; காமதனு என்னும் அடிக்குக் 'கருங்கண்' என்னுஞ் சொல்லும்; தாவென்னும் எழுத்து முதலாகிய அடியுள் 'தந்திலர்' என்னுஞ் சொல்லும் வந்தன.

"மஞ்சின் மதிசூ டுடையான் மணஞ்செய்யப்
பஞ்சவனம் வாடை படைத்தருளும்-விஞ்சு
புகழா ரளகேசர் பூம்புகா ரென்னு
நகராரை யொப்பவரார் நாட்டு."

இதனுள் மஞ்சின் என்னும் அடியுள் 'மதி' என்றும், 'மணம்' என்றும்; பஞ்சவனம் என்னும் அடியுட் 'படைத்து' என்றும்; புகழார் என்னும் அடியுட் 'புகார்' என்றும்; நகரார் என்னும் அடியுள் 'நாட்டு' என்றும் வந்தன. பிறவும் அன்ன.

(4)